கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு கடலளவு பேராசைப்படும் அண்ணாமலையை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
ராமநாதபுரம்,
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அ.தி.மு.க. அணையப்போகிற விளக்கு என்றும், தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. எத்தனை இடங்களில் வெற்றிபெறுகிறது என்பதையும் பார்ப்போம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சு குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது;-
"அ.தி.மு.க. என்பது கலங்கரை விளக்கம். அண்ணாமலைக்கு அரசியல் அறிவு மிகவும் குறைவாக உள்ளது. அவர் கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு கடலளவு ஆசைப்படுகிறார். அவரது சிந்தனையும், பேச்சும், அணுகுமுறையும் வெறுக்கத்தக்க வகையில் இருக்கிறது. பா.ஜ.க. 100 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கட்சி என்றாலும் கூட, அண்ணாமலை தமிழ்நாட்டில் நியமன பதவியில் இருப்பதைக் கூட உணர்ந்து கொள்ளாமல் ஏதோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைப்போல் பேசி வருகிறார். எனவேதான் சொல்கிறேன், கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு கடலளவு பேராசைப்படும் அண்ணாமலையை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்."
இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.