மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அன்னபூர்ணா ஹோட்டலின் உரிமையாளரும் பேசிக் கொண்ட தனிப்பட்ட உரையாடலை தமிழக பாரதிய ஜனதாவினர் வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மாநில தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
அன்னபூர்ணா நிறுவனரின் விடியோ
கோவையில் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் மன்னிப்புக் கேட்கும் விடியோ தற்போது அகில இந்திய அளவில் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
கோவையில் ஜிஎஸ்டி பற்றி நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் கேள்வி எழுப்பிய விடியோ கடந்த இரு நாள்களாக டிரெண்ட் ஆனது.
இந்த நிலையில், கேள்வி கேட்ட சீனிவாசனை அழைத்து நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கேட்கச் செய்ததுடன், அந்த விடியோவையும் பாரதிய ஜனதா தரப்பிலிருந்து வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த விடியோவுடன் இணைந்தே கேள்வி கேட்ட தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்ததாக, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்கச் செய்வதா? நிர்மலா சீதாராமனுக்கு குவியும் கண்டனங்கள்!
அண்ணாமலை மன்னிப்பு
“மதிப்பிற்குரிய நிதியமைச்சருக்கும் தொழிலதிபருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் விடியோவை பகிர்ந்ததற்காக தமிழக பாஜகவினர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் மதிப்பிற்குரிய சீனிவாசனை தொடர்பு கொண்டு, எதிர்பாராத விதமாக நடந்த தனியுரிமை மீறலுக்காக வருத்தம் தெரிவித்தேன்.
சகோதரர் அன்னபூர்ணா சீனிவாசன், தமிழக வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்குமாறு அனைவருக்கும் கோரிக்கை வைக்கிறேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, நிர்மலா சீதாராமன் மற்றும் சீனிவாசன் இடையேயான உரையாடலை சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து பாஜகவினர் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.