ரசிகர்கள் எதிர்பார்த்தபடி 'டெட்பூல் & வோல்வரின்' படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது.
மும்பை,
மார்வெல் படங்களின் வரிசையில் வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து 'டெட்பூல் & வோல்வரின்' என்ற படம் உருவானது. இது இதற்கு முன்னதாக வந்த டெட்பூல் மற்றும் டெட்பூல் 2 ஆகிய படங்களின் தொடர்ச்சியாகும்.
இப்படம் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்து வசூலை அள்ளியது. அதன்படி, ரியான் ரெனால்ட் மற்றும் ஹக் ஜேக்மேன் நடித்துள்ள இப்படம் ரூ.8,000 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பியது.
மேலும், இது 2024-ம் ஆண்டில் வெளியான படங்களில் ஆரம்பத்திலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையை பெற்றது. இதனையடுத்து, இப்படம் எப்போது ஓ.டி.டியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடி 'டெட்பூல் & வோல்வரின்' படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது.
அதன்படி, இப்படத்தை இந்திய ரசிகர்கள் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணலாம் என்று கூறப்படுகிறது. இந்த தளத்தில் ஏற்கனவே பல மார்வெல் படங்கள் உள்ளன. தற்போது 'டெட்பூல் & வோல்வரின்' படமும் அதில் ஒன்றாக இணைய இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.