சென்னை:
கோயம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல மின்சார ரெயிலோ, மெட்ரோ ரெயில் போக்குவரத்தோ இல்லாததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் பெரும் அவதி அடைவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.வண்டலூர் முதல் காட்டாங்குளத்தூர் வரை முதற்கட்டமாக உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் எனவும், தேவையற்ற காலவிரயம் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.