சிதம்பரம்: கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து கடலூா் மாவட்டத்தில் வேளாண் பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை (செப்.13) தமிழக உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்து வைத்தார்.
தஞ்சாவூா் மாவட்டம், அணைக்கரையில் கீழணை அமைந்துள்ளது. இந்த அணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கில பொறியாளர் சர் ஆதார் காட்டன் என்பவரால் 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தெற்கு வடக்கு கொள்ளிட பிரிவுகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஷட்டருடன் கூடிய 80 மதகுகள் உள்ளது. இந்த அணைக்கு மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் கல்லணையில் தேக்கப்பட்டு, ஒரு பகுதியாக கொள்ளிடம் ஆற்றில் அனுப்பப்படுகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 9 அடி, அதாவது 150.13 மில்லியன் கன அடியாகும்.
அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் வடவாறு, வீராணம் ஏரி, வடக்கு, தெற்கு ராஜன் வாய்க்கால்கள், குமுக்கி மண்ணியாறு, கோதண்டராமன் வாய்க்கால் என பல்வேறு வாய்க்கால்கள் வாயிலாக பாசனத்துக்கு செல்கிறது.
இதன் மூலம் கடலூா் மாவட்டத்தில் 92,854 ஏக்கரும், தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,294 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 37,756 ஏக்கா் விளைநிலங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
ஐடிஐ-களில் நேரடி மாணவா் சோ்க்கை செப்.30 வரை நீட்டிப்பு
ஆண்டுதோறும் இந்தப் பகுதியில் சம்பா சாகுபடியின் போது விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுவா். சில பகுதிகளில் நாற்றங்கால் தயாா் செய்யும் பணி நடைபெறும். இதன் காரணமாக கீழணைலிருந்து தண்ணீா் திறப்பது சற்று தாமதம் ஆகும். தற்போது, கீழணையில் புதன்கிழமை நிலவரப்படி அதன் முழு கொள்ளளவான 9 அடியில் 8.50 அடி நீரும், வீராணம் ஏரியில் முழு கொள்ளளவான 47.50 அடியில் 43.95 அடி நீரும் தேக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு பாசனத்துக்காக தண்ணீரை வெள்ளிக்கிழமை (செப்.13) காலை 8 மணிக்கு கீழணையிலிருந்தும், 9.30 மணிக்கு வீராணம் ஏரியில் இருந்தும் வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திறந்து வைத்தார்.
வடவாற்றில் ஆயிரம் கன அடியும், வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களில் தலா 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர், காட்டுமன்னார்கோவில், திருவிடைமருதூர் தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், சிதம்பரம் உதவி ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பாசனத்திற்கு தண்ணீீரை திறந்து வைத்தார்.