குழந்தை நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு சென்னிமலை ரோட்டில் ரங்கம்பாளையம் பகுதி நேற்று காலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது காலை 11.15 மணி அளவில் ரங்கம்பாளையத்தில் உள்ள 2 தனியார் திருமண மண்டபங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சாலையோர புதரில் ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது.
இதை கேட்ட ரங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியில் கடை வைத்துள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது ஒரு கட்டைப்பையில் துணியால் சுற்றப்பட்டு, பிறந்த பச்சிளம் பெண் குழந்தை, தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் கிடந்தது.
உடனே அங்கு வசிக்கும் பெண் ஒருவர் பையில் இருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் பொதுமக்களும் சென்றனர். அங்கு பச்சிளம் குழந்தைக்கு தொப்புள் கொடியை கட்டி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து குழந்தையை பார்வையிட்டதுடன், பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து குழந்தையை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு, தொப்புள் கொடியை அகற்றி, இன்க்பெட்டரில் வைத்து, தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் குழந்தைக்கு ரத்தபரிசோதனை செய்யப்பட்டது. தற்போது, குழந்தை 2 கிலோ எடையுடன் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் குழந்தை பிறந்து ஒரு நாள் ஆகி இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
பச்சிளம் குழந்தையை உயிருடன் கட்டைப்பையில் வைத்து சாலையோரம் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கள்ளத்தொடர்பினால் இந்த குழந்தை பிறந்ததா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசி சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.