9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
நியூயார்க்,
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் நேற்று தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா அணியும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணியும், 'சி' பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, உகாண்டா, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா அணியும், 'டி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணியும் இடம் பெற்றுள்ளன.
டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணி முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 6-ம் தேதி அமெரிக்க அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.
இந்நிலையில், டி 20 உலகக் கோப்பை தொடருக்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்கா வந்திறங்கியது. அப்போது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் சிறிது நேரம் உரையாடினர்.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. கடந்த தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Babar Azam interacts with cricketing icon Sunil Gavaskar #T20WorldCuppic.twitter.com/YZMRkDBXWV
— Pakistan Cricket (@TheRealPCB) June 1, 2024