உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.
சென்னை,
* நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் இன்று விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. வாக்குப்பதிவு எந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டன.
* நடிகர் சல்மான்கானை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக தாதா பிஸ்னோய் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை புறநகரில் உள்ள பண்ணை வீட்டுக்கு சல்மான்கான் செல்லும் போது அவரை சுட்டுக்கொல்ல அவர்கள் திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்தது.
* 172 பயணிகளுடன் சென்ற சென்னை- மும்பை இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மும்பை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சோதனைக்கு பின்னர் அது புரளி என்பது தெரியவந்தது.
* பிரதமர் மோடி இன்றும் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வருகிறார். விவேகானந்தர் மண்டபத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
* தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைப்பு செயலாளர் ஆ.எஸ். பாரதி, தி.மு.க. எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
* இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ள திட்டத்துக்கு ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளன.
* சீனா- பாகிஸ்தான் இடையே புதிய வழித்தடத்தில் விமான சரக்கு போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. பாக். பிரதமர் அடுத்தவாரம் சீனா செல்லும் போது இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.