சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தின் குறிப்பிட்ட ஒரு நுழைவாயில், மோசடி கும்பலின் சொர்க்கத்தின் வாசற்படி போல செயல்பட்டிருப்பதை அமலாக்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த 9-வது நுழைவாயில்தான், விமான நிலைய அடிப்படை பணியாளர்கள் உள்ளே வருவதற்குப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால், இதனை வெளிநாட்டிலிருந்து பயணிகள் இந்தியாவுக்குக் கடத்தி வரும் விலை மதிப்பற்ற தங்கம் உள்ளிட்டவை எந்த சிக்கலும் இல்லாமல் வெளியே கொண்டு வர பயன்படுத்தும் நுழைவாயிலாக மாற்றப்பட்டிருக்கிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.
விமான நிலையத்தின் பல்லாவரம் பகுதியில் அமைந்திருக்கும் 9வது நுழைவாயில் வழியாகத்தான், உணவு ஒப்பந்ததாரர்கள், எரிபொருள் வழங்குவோர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் வந்து செல்லப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவர்களுடன் மோசடி கும்பல் கைகோர்த்து தங்கம் உள்ளிட்டவற்றை கடத்தும் வழியாக மாற்றியிருக்கிறார்கள் என்று வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம், துபையிலிருந்து வந்த பயணி கடத்தி வந்த 2.2 கிலோ எடையுள்ள ரூ.1.5 கோடி மதிப்பு தங்கத்தை, விமான நிலைய தூய்மை பணியாளர்கள் பி. தீபக் மற்றும் பேச்சி முத்து ஆகியோர் இந்த 9வது நுழைவாயில் வழியாக வெளியே கொண்டு வந்தபோது, கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏர் இந்தியா விமான நிலைய சேவை நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
இது ஒரே ஒரு சம்பவமல்ல, ஏராளமான சம்பவங்களில், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அடிப்படை ஊழியர்கள், பயணிகள் கடத்தி வரும் பொருள்கள் இந்த நுழைவாயில் வழியாக வெளியே கொண்டு வரப்படுகிறது. பயணிகள் வராததால், இந்த நுழைவாயிலில் இருக்கும் பாதுகாவலர்களும் உரிய முறையில் சோதனைகளை மேற்கொள்ளாததால், இந்த நுழைவாயிலை மோசடியார்கள் தேர்வு செய்துள்ளனர்.
இங்கு மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர், இவ்வழியாக வாகனங்களும் ஊழியர்களும் நுழைவார்கள், பைகளை சோதனை செய்யும் இயந்திரங்களும் உள்ளன. ஆனால், இவை அனைத்திலிருந்தும் தப்பிக்க மோசடி கும்பல் கைதேர்ந்துள்ளனர்.
இதையும் படிக்க.. இந்தியர்களைக் கடத்தி சைபர் அடிமைகளாக்கி மோசடி! சினிமாவை விஞ்சும் கும்பல்!!
அதிகாரிகள் கூறுவது என்ன?
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இவ்வழியாக ஏராளமான உணவு உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால், அனைத்தையும் பக்காவாக சோதனை செய்வது என்பது இயலாது, விமானத்தில் பயணிகளுக்குக் கொடுக்கப்படும் உணவுப் பொட்டலங்கள் உள்பட எரிபொருள் என அனைத்தும் செல்லும்போது உரிய நேரத்துக்குள் அவை உள்ளே அனுப்ப வேண்டும் என்பதே சவாலாக மாறிவிடுகிறது.
எனவே, கண்டெய்னர் ஸ்கேனர்களை பொறுத்தி உடனடியாக ஆய்வு செய்வதுதான் ஒரே வழி என்கிறார்கள் அதிகாரிகள்.
ஊழியர்கள் அனைவரையும் ஒரே நுழைவாயிலில் அனுமதிப்பது என்ற முறையை மாற்ற வேண்டும் என்றும் புலனாய்வு அமைப்புகள் விமான நிலைய நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.