தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காதா' பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
சென்னை,
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜானி மாஸ்டர். தமிழில் அரபிக் குத்து, ரஞ்சிதமே, காவலா, மேகம் கருக்காதா உள்ளிட்ட பாடல்களுக்கு இவர்தான் நடன இயக்குனராவார். சமீபத்தில், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காதா' பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், நடன கலைஞரான இளம்பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் மீது சைதராபாத் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, அவரை தனது ஜன சேனா கட்சியில் இருந்து நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் நீக்கினார். இதன் தொடர்ச்சியாக தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்தில் இருந்து ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்ட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது, போக்சோ வழக்கும் பாய்ந்தது. இதனைத்தொடர்ந்து, தலைமறைவான ஜானி மாஸ்டரை பெங்களூருவில் கைது செய்த போலீசார், அவரை ஐதராபாத் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி சிறையில் அடைந்தனர்.
இந்த சூழலில், தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக நடன இயக்குனர் ஜானிக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மாளிகையில் தேசிய விருது வழங்கப்பட இருந்தநிலையில், திடீர் திருப்பமாக ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜானி மாஸ்டரின் செய்யக்கூடாத செயல்.. தேசிய விருது ரத்து https://t.co/Tid8XSI60m#johnnymaster#award#thanthitv
— Thanthi TV (@ThanthiTV) October 6, 2024