அதிமுகவை பற்றி பேசுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை,
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அண்ணாமலைக்கு அசைன்மென்ட் கொடுப்பது அமித்ஷாவாக இருக்கட்டும். ஆனால் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த 2 கோடி தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி அசைன்மென்ட் கொடுத்துள்ளார். அண்ணாமலை அசைன்மென்ட் என்னவாகும் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும். ஆனால், அதிமுக தொண்டர்கள் இதயத்தில் சுமந்து கொண்டுள்ள அசைன்மென்ட் உறுதியாக அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும். பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில், கட்சிக் கூட்டத்தில் அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?.
வரலாறு தெரியாதவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். அண்ணாமலையின் பேச்சுகள், உண்மையான அதிமுக தொண்டனின் நெஞ்சில் முள் பாய்ந்ததைபோல் உள்ளது. அதிமுகவை பற்றி பேசுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதிமுக என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல.
தா.மோ.அன்பரசன் அமைச்சர் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர். அவர் ஜெயலலிதாவை பற்றி தொடர்ந்து தரம் தாழ்ந்து பேசி வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.