Monday, October 7, 2024

திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்புக் குழுவின் விசாரணை நிறுத்தம்!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர மாநில அரசு நியமித்த சிறப்புக் குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு போன்ற தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்ற கலப்படங்கள் இருந்ததாக கூறும் ஆய்வறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. இந்த விவகாரம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

இதையும் படிக்க | திருப்பதி லட்டு ஆய்வறிக்கை தெளிவாக இல்லை! சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

இதனிடையே, லட்டு கலப்படம் குறித்து வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரிக்க 9 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து சந்திரபாபு நாயுடு கடந்த செப். 26 ஆம் தேதி உத்தரவிட்டார்.

குண்டூா் சரக காவல்துறை ஐ.ஜி. சா்வசிரேஷ்ட திரிபாதி தலைமையிலான இக்குழுவில் விசாகப்பட்டினம் சரக டிஐஜி கோபிநாத், ஒய்எஸ்ஆா் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்வா்தன் ராஜு, திருப்பதி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் வெங்கட ராவ், துணை கண்காணிப்பாளா்கள் சீதாராம ராவ், சிவநாராயண சுவாமி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனா்.

இந்த குழு கடந்த செப். 28 ஆம் தேதி தொடங்கி திருப்பதி திருமலையில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று(செப். 30) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'திருப்பதி லட்டில் கலப்படம் குறித்து கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள்(சந்திரபாபு நாயுடு) இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் ஏன் எடுத்துச் சென்றீர்கள்? சிறப்பு விசாரணைக்குழுவை நியமித்துள்ள மாநில அரசு, அதன் அறிக்கை வருவதற்கு முன்னே ஊடகங்களில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?' என பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்க | ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ – 3 சட்ட முன்வரைவுகளைக் கொண்டுவர முடிவு! சாத்தியமா?

தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணை நாளை மறுநாள்(அக். 3) ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே, உச்சநீதிமன்றத்தில் அடுத்த விசாரணை நடைபெறும் வரை, ஆந்திர மாநில அரசு நியமித்துள்ள சிறப்புக்குழு விசாரணை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி துவாரகா திருமலை ராவ் கூறுகையில், 'நாங்கள் முதற்கட்ட விசாரணையை முடித்துவிட்டோம். இதுகுறித்து சிலரிடம் கருத்துகளை கேட்டு பதிவு செய்துள்ளோம். தற்போது இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருவதால் எங்கள் விசாரணையை நிறுத்திவைத்துள்ளோம்' என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024