பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகிவருவதால், மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராப் இசைக் கலைஞர் பால் டப்பா என்னும் அனீஷ் பிக் பாஸ் சீசன் 8-ல் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த இரு சீசன்களாக ராப் இசைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் போட்டியாளராகியுள்ளனர்.
இதுவரை ராப் பாடகர்கள் ஏடிகே, அசல் கோளாறு, நிக்சன் ஆகியோர் ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்றுள்ளனர்.
பாடகராக மாறிய நடனக் கலைஞர்
அந்தவகையில் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பால் டப்பா அனீஷ் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள பிரதர் படத்தில் 'மக்காமிஷி…' பாடலைப் பாடியுள்ளார்.
ஹாரிஸ் ஜெயாராஜ் இசையில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார். அதோடு மட்டுமின்றி கேரள மாநில விருது பெற்ற இசையமைப்பாளர் சிஷின் சியாம் இசையில், ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் படத்தில் 'கலாட்டா…' என்ற பாடலைப் பாடியுள்ளார்.
இதோடு மட்டுமின்றி பல தனிப் பாடல்களையும் (ஆல்பம்) வெளியிட்டுள்ளார். 170CM, 3SHA, Ai, காத்து மேல, ஆகிய தனிப்பாடல்களையும் வெளியிட்டு பிரபலமானவர்.
படிக்க |‘என்னைப்போன்று தமிழ் எழுதுபவர்கள்’.. சீரியல் நடிகை கேலி!
ஆரம்பத்தில் நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பால் டப்பா அனீஷ், பின்னாள்களில் இசைக் கலைஞராக மாறினார். எழுதும் திறனை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்துவந்ததால், அவரின் பாடல்களுக்கு அவரே வரிகளையும் எழுதுகிறார்.
ராப் இசை விரும்புவோரிடையே மிகவும் பிரபலமாக அறியப்படும் பால் டப்பா அனீஷ், பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றால், அவரின் பாடல்கள் மூலம் நிகழ்ச்சி, பொழுதுபோக்கிற்கு பஞ்சமின்றி செல்லும் என்பதே ரசிகர்கள் கருத்தாக உள்ளது.