வருகிற 4-ந்தேதி வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அடுக்கடுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து, வருகிற 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, வாக்கு எண்ணிக்கையின்போது, தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, தி.மு.க. செய்தித்தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உடன் இருந்தார்.
கூட்டத்தில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு முகவர்கள், அனைவரும் காலை 6.30 மணிக்குள் செல்ல வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தேர்தல் விதிகளின்படி, செல்போன் எடுத்து செல்லக்கூடாது. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது, முகவர்கள் மிகவும் கவனமாக, விழிப்புடன் இருக்க வேண்டும்.
தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, அதற்கான முடிவுகள் அறிவிக்கும்வரை அதற்காக நியமிக்கப்பட்ட முகவர்கள் அங்கிருந்து வெளியேற கூடாது. வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு சுற்று தொடங்கும்போதும், ஒவ்வொரு மேஜைகளுக்கு கொண்டு வரப்படும் வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள சீல்கள் சரியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
மேலும், படிவம் 17சி-யில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரத்தின் எண்ணும், எண்ணிக்கைக்காக கொண்டுவரப்படும் எந்திரத்தின் எண்ணும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவு எந்திரத்தின் சீல்களும், வாக்குப்பதிவு எந்திரத்தின் எண்களும் சரியாக இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணிக்கையை தொடங்க அனுமதிக்க வேண்டும்.
வாக்குப்பதிவு எந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டிருந்தாலோ அல்லது எந்திரத்தின் எண்கள் மாறுபட்டிருந்தாலோ, வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வலியுறுத்திவிட்டு, முதன்மை முகவர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளை, கையேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும்.
அந்த எண்ணிக்கை, வாக்குப்பதிவு எண்ணிக்கையுடன் ஒத்துப்போகிறதா என்பதை கவனிக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் ஏதாவது முறையீடுகள் இருந்தால், அதுகுறித்து வேட்பாளரோ அல்லது முதன்மை முகவர்களோ உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் எழுத்துபூர்வமாக புகார் தெரிவித்து, அதற்கான ஒப்புகை சீட்டு பெற வேண்டும். அனைத்து சுற்று வாக்குகளும், ஒப்புகை சீட்டுகளும் எண்ணி முடித்த பிறகே, முகவர்கள் வாக்கு எண்ணும் அறையில் இருந்து வெளியேற வேண்டும் என முகவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.