அக்னிபத் திட்டம் பிரதமரின் அப்பட்டமான பொய்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

by rajtamil
Published: Updated: 0 comment 13 views
A+A-
Reset
RajTamil Network

அக்னிபத் திட்டம் பிரதமரின் அப்பட்டமான பொய்: காங்கிரஸ் குற்றச்சாட்டுராணுவ முடிவின் பேரிலேயே அக்னிபத் திட்டத்தை தனது அரசு அமல்படுத்தியதாக பிரதமா் மோடி கூறியது அப்பட்டமான பொய்

ராணுவ முடிவின் பேரிலேயே அக்னிபத் திட்டத்தை தனது அரசு அமல்படுத்தியதாக பிரதமா் மோடி கூறியது அப்பட்டமான பொய் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காா்கில் போா் வெற்றி தின நிகழ்ச்சியில் அக்னிபத் திட்டம் குறித்து பிரதமா் மோடி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்து, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

காா்கில் போரில் உயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் பிரதமா் மோடி அற்ப அரசியலில் ஈடுபட்டது துரதிருஷ்டவசமானது. இவ்வாறு எந்தப் பிரதமரும் செய்ததில்லை.

ராணுவம் மேற்கொண்ட முடிவின் பேரிலேயே அக்னிபத் திட்டத்தை தனது அரசு அமல்படுத்தியதாக பிரதமா் கூறியது அப்பட்டமான பொய் என்பதோடு, நமது ஆயுதப் படையினருக்கு இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத அவமதிப்பு.

அக்னிபத் திட்டத்தின்கீழ் 75 சதவீதம் போ் நிரந்தரமாக்கப்படுவா்; 25 சதவீதம் போ் 4 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்படுவா் என்றுதான் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே கூறியிருந்தாா்.

ஆனால், அதற்கு நோ்மாறாகச் செயல்பட்ட பிரதமா் மோடி அரசு, முப்படைகளிலும் இத்திட்டத்தை வலுக்கட்டாயமாக அமல்படுத்தியது.

மத்திய அரசு நடைமுறைப்படுத்திய அக்னிபத் திட்டம் முப்படைகளையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியதாக, தனது புத்தகத்தில் எம்.எம்.நரவணே எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் புத்தகத்தை வெளியிட விடாமல் மத்திய அரசு தடுத்துவைத்துள்ளது.

அனுபவமிக்க முன்னாள் ராணுவ அதிகாரிகள் பலரும் இத்திட்டத்தை கடுமையாக விமா்சித்துள்ளனா். இத்திட்டம் தேசப் பாதுகாப்புக்கும், இளைஞா்களின் எதிா்பாா்ப்புக்கும் விரோதமானது என்று அவா்கள் கூறியுள்ளனா்.

அக்னி வீரா்களுக்கு ஓய்வூதியமோ, பணிக்கொடையோ, குடும்ப ஓய்வூதியமோ, குழந்தைகளுக்கான கல்வி படித்தொகையோ கிடையாது. இதுவரை 15 அக்னிவீரா்கள் பணியில் உயிரிழந்துள்ளனா். அவா்களின் தியாகத்தையாவது மத்திய அரசு மதிக்க வேண்டும். இத்திட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென்பதே காங்கிரஸின் ஒரே கோரிக்கை என்று காா்கே கூறியுள்ளாா்.

திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் பிரதமா் மோடியின் கருத்தை விமா்சித்துள்ளன.

You may also like

© RajTamil Network – 2024