அக்.2 கிராம சபைக் கூட்டம்: ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரிக்க தமிழகம் முழுவதும் அறிவுறுத்தல்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

அக்.2 கிராம சபைக் கூட்டம்: ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரிக்க தமிழகம் முழுவதும் அறிவுறுத்தல்

சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி வளர்ச்சித்திட்டம் தயாரிக்கவும், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பா.பொன்னையா அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: “காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணியளவில் நடத்தப்பட வேண்டும். கிரம சபைக்கூட்டங்களை மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக்கூடாது.

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் கடந்த ஏப்.1 முதல் செப்.30 வரை உள்ள காலத்தில் ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை படிவத்தை படித்து ஒப்புதல் பெற வேண்டும். கிராம ஊராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறவேண்டும். தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செயவது குறித்து விவாதிக்க வேண்டும். மேலும், 15-வது மத்திய நிதி மானியக் குழுவால் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மானிய நிதி, கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் ஏற்கெனவே உள்ள கட்டுமான வசதிகள், இதர வசதிகளை கருத்தில் கொண்டு 2025-26ம் நிதியாண்டுக்கு தேவையான பணிகள், வசதிகள் ஆகியவற்றை தொகுத்து கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம் தயாரிக்க வேண்டும். இந்த வளர்ச்சித்திட்டத்தை மக்கள் பங்களிப்புடன் மக்கள் இயக்கமாக மாற்ற உத்தேசித்து மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கான திட்டமிடல் இயக்கத்தை அறிவித்துள்ளது. எனவே, கிராம வளர்ச்சித்திட்டமானது, கிராம வறுமை குறைப்பு திட்டம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதார திட்டம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான குடிநீர்த் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பு திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து முழுமையானசெயல்திட்டமாக தயாரிக்கப்பட வேண்டும்.

எனவே, ஊராட்சியில் ஏற்கெனவே உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் இதர வரசதிகளை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை தயாரிப்பது குறித்து விவாதிக்க வேண்டும். தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மூலம் ஏற்கெனவே அடையாள அட்டை வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் கூடுதல் தகவல்களை, தரவு தளத்தில் இடம்பெறாதவர்களின் விவரங்களை பிரத்யேக செயலி மூலம் சேகரித்து தொகுக்கப்படுகிறது. எனவே, ஊராட்சி வாரியாக மாற்றுத்திறனளிகள் பட்டியல் சரிபார்ப்பு, சமூக பதிவேட்டில் சேர்க்கப்படாத மாற்றுத்திறனாளிகள் விவரங்கள் சேகரித்தல், தனித்துவ அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் நடத்தப்படுவது உள்ளிட்டவற்றை தெரிவிக்க வேண்டும்.

மேலும், ஜல்ஜீவன் இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் கிராம குடிநீர் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 10 சதவீத சமூக பங்களிப்பை வழங்குவதன் மூலம் கிராம ஊராட்சியின் குடிநீர் திட்டப்பணிகளில் அனைவரும் பங்கேற்பதை உறுதிசெய்தல், குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்ட பின் வீட்டில் உள்ள குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணை பெற்று ஜல் ஜீவன் இயக்கத் தளத்தில் பதிவு செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024