அசாமில் ரீமால் புயல் பாதிப்பு: ஒருவர் பலி; 17 பேர் காயம்

by rajtamil
0 comment 61 views
A+A-
Reset

கவுகாத்தி,

வங்காளதேசத்தின் கடலோர பகுதியில் நேற்றிரவு ரீமால் புயல் கரையை கடந்தது. இந்நிலையில், அசாமில் ரீமால் புயலால் பல்வேறு இடங்களிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அசாம் பேரிடர் மேலாண் நிர்வாக கழகம் வெளியிட்ட செய்தியில், புயல் பாதிப்புக்கு மோரிகாவன் மாவட்டத்தில் வசித்து வந்த ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இதுதவிர, 4 பேர் காயமடைந்து உள்ளனர். இதேபோன்று, சோனித்பூர் மாவட்டத்தில் தேகியாஜுலி நகரில் பள்ளி பஸ் மீது மரம் ஒன்றின் கிளை முறிந்து விழுந்தது. இதில் மாணவர்கள் 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கம்ரூப் மாவட்டத்தில் பலாஸ்பாரி பகுதியில் ஒருவர் புயல் பாதிப்புக்கு காயமடைந்து உள்ளார்.

இதேபோன்று, பலாஷ்பாரி, சாய்காவன் மற்றும் போகோ வருவாய் வட்டம் ஆகிய பகுதிகளில் பல்வேறு வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் பல வேருடன் சாய்ந்தன. நகாவன் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அசாம் மின் விநியோக நிறுவனத்தின் உட்கட்டமைப்புகள் பாதிப்படைந்து இருந்தன.

திம ஹசாவோ மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்களும் பதிவாகி உள்ளன. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளும் நடந்து வருகின்றன.

தொடர்ந்து, முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி, மின்கசிவால் ஏற்படும் தீ விபத்துகள் ஆகியவற்றை சரி செய்வதுடன், குடிமக்களின் பாதுகாப்பை சரியான தருணத்தில் உறுதி செய்யும் பணியும் நடந்து வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024