அண்ணன் என்ன.. தம்பி என்ன.. எதிரி எதிரிதான் என விஜய் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீமான் பிறகு செய்தியாளர்களையும் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், திராவிடமும் தமிழ்த் தேசியமும் தனது இரு கண்கள் என்று விஜய் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, வில்லனும் கதாநாயகனும் எவ்வாறு ஒன்றாக முடியும். விஷமும், விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்று என்று சொல்லிக்கொண்டு விஜய் ஏன் வர வேண்டும்? மேலும், திராவிடம் என்றால் என்ன? தமிழ்த் தேசியம் என்றால் என்ன? என்று விஜய் விளக்குவாரா? என்று கேட்டுள்ளார் சீமான்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து பேசுகையில், விஜய் தனது கொள்கையை மாற்ற வேண்டும், அல்லது பேசுவதற்கு எழுதிக் கொடுப்பவரை மாற்ற வேண்டும், தமிழக வெற்றிக் கழகத்தின் மொழிக் கொள்கை தவறாக உள்ளது, என்றும் சீமான் கூறியிருக்கிறார். ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, மீனவர்கள் பிரச்னையில் விஜய்-யின் நிலைப்பாடு என்ன? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க.. களைகட்டிய தீபாவளி: சென்னையில் பட்டாசு விற்பனை மந்தமா?
தவெக தலைவர் விஜய் பற்றி ஆவேசமாக பேசும்போது, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பற்றி நல்ல விதமாக பேசினீர்களே என்ற கேள்விக்கு.. நல்ல விதமாக அல்ல, உண்மையைப் பேசினேன் என்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மொழிக் கொள்கையே தவறாக உள்ளது. கொள்கைக்கு எதிராக நின்றால் தாய், தந்தையாக இருந்தாலும் எதிரிகள்தான். கடவுளே என்றாலும் என கொள்கையில் வேறுபட்டால் எதிரிதான். சாதியும் மதமும் மொழியும் இனமும் ஒன்று இல்லை, எதுகை மோனை போல் பேசக் கூடாது, இதில் அண்ணன் என்ன.. தம்பி என்ன? ஒரு மொழி கொள்கைதான் வேண்டும், வேண்டுமென்றால் விரும்பிய மொழிகளை கற்கலாம், அடுத்தவனின் மொழியான ஆங்கிலத்தை ஏன் கொள்கையாக வைக்க வேண்டும்? நான் சொல்வது குட்டிக்கதை ஒன்றும் கிடையாது. நான் சொல்வது அனைத்தும் வரலாறு. என்று சீமான் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி வைப்பது குறித்து கேள்விக்கு, சீமான் அளித்த பதிலில், நிச்சயமாக தமிழக வெற்றிக் கழகத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைக்காது. எனது ஆசிரியரான திருமாவளவன் சிந்தித்து தெளிவான முடிவைத்தான் எடுப்பார். என் ஆசிரியர் தவறான முடிவெடுக்க மாட்டார் என்பது, ஒரு மாணவராக எனக்கு நன்றாக தெரியும் என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சீமான், திமுகதான் உங்கள் எதிரியா? காங்கிரஸ், அதிமுக உங்கள் எதிரி இல்லையா? பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, இரண்டு கட்சிகளுமே ஒன்றுதான் என்றும் கூறினார்.