Friday, September 20, 2024

அண்ணாமலைக்கு எதிராக கோஷம்: நடுரோட்டில் வெட்டப்பட்ட ஆடு – சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு

by rajtamil
0 comment 58 views
A+A-
Reset

கிருஷ்ணகிரி,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் கடந்த 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ்நாடு -புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜனதா கூட்டணி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பையூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆடு ஒன்றின் கழுத்தில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் படத்தை அணிவித்து சிலர் அழைத்து வந்தனர். தொடர்ந்து அந்த ஆட்டை நடுரோட்டில் அதன் தலையை வெட்டி சாகடித்தனர். அப்போது அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இந்த வீடியோ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் வைரல் ஆனது. இந்த வீடியோ காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் கே.எஸ்.ஜி.சிவப்பிரகாஷ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்குவை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அதில், "எங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக வந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். அதில் சில சமூக விரோதிகள் ஆடு ஒன்றை நடுரோட்டில் வெட்டி அதன் ரத்தத்தை பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படத்தின் மீது தெளித்துள்ளனர். மேலும் 'அண்ணாமலை ஆடு, பலி ஆடு' என்று கோஷமிட்டு அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அதை பரப்பி வன்மத்தையும் பிரிவினையையும் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தும் வகையில் செய்துள்ளனர்.

மேலும் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் 10 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024