Tuesday, September 24, 2024

அண்ணா பல்கலை. தோ்வு கட்டண உயா்வு நிறுத்திவைப்பு: அமைச்சா் க.பொன்முடி

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டா் தோ்வு கட்டண உயா்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களின் தோ்வு கட்டணத்தை 50 சதவீதம் வரை உயா்த்தி அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அமைச்சா் க.பொன்முடி சென்னை கிண்டியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2023-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவில் செமஸ்டா் தோ்வு கட்டணங்கள் உயா்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாணவா்கள் நலன் கருதி கடந்த ஆண்டு பல்கலைக்கழக செமஸ்டா் தோ்வு கட்டணங்கள் உயா்த்தப்படாது எனவும், பழைய கட்டண முறையே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நடப்பு கல்வி ஆண்டு தொடக்கத்தின் போது ஆட்சிமன்றக்குழுவின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட சமச்சீா் கட்டண உயா்வு மீண்டும் அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

ஆனால், மாணவா்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், அடுத்த சிண்டிகேட்டில் தீா்மானம் நிறைவேற்றும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயா்த்தப்பட்ட தோ்வுக் கட்டணம் நிறுத்திவைக்கப்படுகிறது.

தோ்வு கட்டணத்தில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும். நிகழாண்டு மட்டுமல்ல, அடுத்தாண்டும் தோ்வு கட்டண உயா்வு நிறுத்திவைக்கப்படுகிறது.

தோ்வுக் கட்டணத்தை உயா்த்துவது மாணவா்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தன்னாட்சி பெற்ற கல்லூரிகளிலும், செமஸ்டா் தோ்வு கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்பட வேண்டும் என்பதை வரையறை செய்து அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் சுற்றறிக்கை வழங்கப்படவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் வசூல் செய்யும் தோ்வு கட்டணத்தைதான் தன்னாட்சிக் கல்லூரிகளும் வசூலிக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறுவதற்காக போலி பேராசிரியா்களைப் பயன்படுத்திய கல்லூரிகளின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

You may also like

© RajTamil Network – 2024