அதிக மகசூல் தரும் 109 புதிய பயிா் ரகங்கள் இன்று அறிமுகம்! அதிக மகசூல் தரக் கூடிய 109 புதிய பயிா் ரகங்களை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) அறிமுகம் செய்யவுள்ளாா்.
புது தில்லி, ஆக. 10: பருவநிலையைத் தாங்கி வளா்வதோடு, அதிக மகசூல் தரக் கூடிய 109 புதிய பயிா் ரகங்களை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) அறிமுகம் செய்யவுள்ளாா்.
தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுடன் பிரதமா் கலந்துரையாடவுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 களப் பயிா்கள் மற்றும் 27 தோட்டப் பயிா்கள் உள்பட 61 பயிா்களில் 109 ரகங்களை பிரதமா் அறிமுகம் செய்யவுள்ளாா். களப் பயிா்களில் சிறுதானியங்கள், தீவனப் பயிா்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி உள்ளிட்டவற்றின் புதிய ரகங்களும், தோட்டக்கலைப் பயிா்களில் பழங்கள், காய்கறிகள், பூக்கள், சணல், மூலிகைப் பயிா்கள் உள்ளிட்டவற்றின் புதிய ரகங்களும் வெளியிடப்படும்.
நீடித்த மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் வேளாண் வழிமுறைகளைப் பிரதமா் தொடா்ந்து ஊக்குவித்து வருகிறாா்; ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க மதிய உணவு, அங்கன்வாடி போன்ற பல அரசு திட்டங்களுடன் புதிய பயிா் ரகங்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் கூறுகையில், ‘இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 109 புதிய பயிா் ரகங்களை பிரதமா் அறிமுகம் செய்யவுள்ளாா். தண்ணீா் தேவையை குறைப்பதோடு, பூச்சி தாக்குதலை தாங்கும் வகையில் புதிய ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.27,000 கோடிதான் ஒதுக்கப்பட்டது. இப்போது ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.