Wednesday, September 25, 2024

அதிசயம்: கொலையாளியைத் தேடி 8 கி.மீ. ஓடி மற்றொரு கொலையைத் தடுத்த மோப்ப நாய்!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

அதிசயம்: கொலையாளியைத் தேடி 8 கி.மீ. ஓடி மற்றொரு கொலையைத் தடுத்த மோப்ப நாய்!கர்நாடகத்தில், கொலையாளியைத் தேடி 8 கி.மீ. ஓடி மற்றொரு கொலையைத் தடுத்த மோப்ப நாய் துங்கா பற்றி செய்திமோப்ப நாய் துங்கா-2 (கோப்புப்படம்)

சாலையில் கொலைசெய்யப்பட்டு வீசப்பட்ட உடலை மோப்பம் பிடித்து, கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க வரவழைக்கப்பட்ட காவல் மோப்ப நாய், 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடி, கொலையாளி செய்யவிருந்த மற்றொரு கொலையையும் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் தேவநகரி மாவட்டத்தில் சாலையோரம் ஒரு இளைஞரின் உடல் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் வந்ததும், மோப்ப நாய் உதவியோடு விரைந்து சென்றது காவல்துறை. சம்பவம் நடந்த இடத்தில் வந்த வாசனையை மோப்பம் பிடித்து, குற்றவாளி சென்ற திசையை நோக்கி ஓடியது துங்கா-2 என்ற போலீஸ் மோப்ப நாய்.

புதன்கிழமை இரவு, அடர்ந்த இருட்டில், கொட்டும் மழையில், மோப்பம் பிடித்துச் செல்வது மிகவும் சவாலானது என்ற நிலையிலும், துங்கா-2 எங்குமே தனது திறன் சளைத்ததில்லை என்பதை நிரூபித்தது. சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடி, ஒரு வீட்டு வாயிலில் நின்றது.

தலைமைக் காவலர் சஃபியுல்லா உள்ளிட்ட காவல்துறையினர், துங்கா-2 நின்ற வீட்டின் வாயில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு ஒருவர் தனது மனைவியை கட்டையால் அடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் ஓடிச் சென்று காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். கொலையாளி, தனது மனைவியைக் கொல்வதிலிருந்து துங்கா காப்பாற்றிவிட்டது. கொலைக் குற்றவாளியையும் காட்டிக்கொடுத்துள்ளது. இதனால், 30 வயதாகும் அழகுக் கலை நிபுணர் ரூபா உயிர்தப்பினார்.

ஒருவேளை நீங்கள் தடுக்காவிட்டால், நான் அவரது காதலனைக் கொன்றது போல, இவளையும் கொன்றிருப்பேன் என்று கத்திக்கொண்டே இருந்திருக்கிறார் கொலையாளி ரங்கசாமி. இவர் தாக்கியதில், பலத்த காயமடைந்த ரூபாவுக்கு அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதாகவும், கிட்டத்தட்ட அவர் நினைவிழந்த நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன நடந்தது என்றால், ரூபாவின் காதலர் என ரங்கசாமி சந்தேகிக்கும் சந்தோஷ் குமாரை (30) சன்னபுராவில் உள்ள விடுதியிலிருந்து அழைத்துச் சென்று கொன்று, சாலையோரம் வீசியிருக்கிறார் உடலை. அங்கு விசாரணைக்குச் சென்ற துங்கா, அங்கிருந்த, ரங்கசாமியின் வாசனையை மோப்பம் பிடித்துக்கொண்டு, நேராக காவலர்களுடன் அவரது வீட்டுக்கே வந்திருக்கிறது.

சந்தேபென்னூர் சாலையோரம் இரவு 9.45 மணிக்கு சந்தோஷ் உடல் கிடந்துள்ளது. காவல் வாகனச் சோதனையின்போது, இதனைப் பார்த்த காவலர்கள் உடனடியாக மோப்ப நாய் உதவியோடு காவலர்களை வரவழைத்தனர். வழக்கமாக ஒரு சில நூறு மீட்டர்கள் ஓடிச் சென்று திரும்பி வரும் மோப்ப நாய்களைப் போல அல்லாமல், துங்கா-2 திடீரென வேகம் எடுத்தது. நேராக குற்றவாளி இருந்த இடத்துக்கே காவல்துறையினரைக் கூட்டிச்சென்றுவிட்டது என்கிறார்கள் காவலர்கள்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், காவல்துறை மோப்ப நாய் படையில் ஏற்கனவே துங்கா என்ற மோப்ப நாய் இருந்தது. அது கிட்டத்தட்ட 70 கொலை வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிக்க உதவியிருக்கிறது. அது 2022ஆம் ஆண்டு இறந்துவிட்டதால், அதன் நினைவாகத்தான் இந்த நாய்க்கு துங்கா-2 என பெயரிடப்பட்டது. இதுவரை துங்கா-2, எந்த வழக்கு விசாரணையிலும் எங்களை ஏமாற்றியதில்லை, ஒருவேளை துங்கா, அந்த வீட்டுக்குச் சென்றிருக்காவிட்டால், நிச்சயம், ரங்கசாமி, ரூபாவைக் கொன்றிருப்பார் என்கிறார்கள் காவல்துறையினர்.

கடந்த ஆண்டுதான் துங்கா-2 பணியில் சேர்ந்துள்ளது. ரங்கசாமி, சந்தோஷ் குமாரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பல முறை எச்சரித்தும், தனது மனைவி, சந்தோஷ் குமாருடன் பேசுவதை நிறுத்தவில்லை என்ற ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாக ரங்கசாமி ஒப்புக்கொண்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024