அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி: இதய நாளத்தில் என்ன பிரச்னை?

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

நடிகர் ரஜினிகாந்த், உடல்நலப் பிரச்னைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது இதய நாளத்தில் ஸ்டென்ட் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூலி படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினிகாந்த், இரண்டு நாள்களுக்கு முன்புதான் சென்னை திரும்பியிருந்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி இரவு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பிறகு, அவருக்கு கடந்த ஒரு சில நாள்களாகவே உடல்நலப் பாதிப்பு இருந்ததாகவும் அதற்காக அவர் சில மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொண்டு மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி, அக். 1ஆம் தேதி காலை 5 மணிக்கு ரஜினிக்கு மருத்துவ சிகிச்சை தொடங்கியிருக்கிறது. சுமார் மூன்று மணி நேரம் முக்கிய சிகிச்சை நடத்தப்பட்டு, ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையும் படிக்க.. கேஷ் ஆன் டெலிவரி.. ரூ.1.5 லட்சத்தில் ஐஃபோன்: கூரியர் நிறுவன ஊழியர் கொலை!

இதனை உறுதிப்படுத்தும் வகையில், அப்போல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில், ரஜினிகாந்த், செப்.30ஆம் தேதி க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்திலிருந்து வெளியேறும் தமனி எனப்படும் ரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் இருந்தது. இதற்கு அறுவைசிகிச்சையின்றி, டிரான்ஸ்கேத்தடர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதயவியல் துறை மூத்த மருத்துவர் சாய் சதீஷ், ரஜினிக்கு சிகிச்சையளித்து, தமனி ரத்த நாளத்தை முழுமையாக அடைத்திருந்த வீக்கத்தை சரி செய்து, அங்கு ஸ்டென்ட் பொருத்தியுள்ளார். ரஜினிக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிகிச்சை குறித்து அவரது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக விளக்கம் கொடுத்துள்ளோம். திட்டமிட்டபடி ரஜினிக்கு சிகிச்சை நல்லபடியாக செய்யப்பட்டுள்ளது. தற்போது ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது, குணமடைந்து வருகிறார், இன்னும் ஒரு சில நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நலப் பாதிப்பு குறித்து மருத்துவமனையிலிருந்து வெளியாகும் தகவல்கள் கூறுகையில், ஆர்டிக் அனீரிசிம்ஸ் என்ற பிரச்னை ரஜினிக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இது தமனி எனப்படும் பெருநாடியில் ஏற்படும் வீக்கமாகும். இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தம் தமனி எனப்படும் ரத்த நாளத்தின் வழியாக உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும். இந்த ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டு, ரஜினிக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வீக்கம் காரணமாக, ரத்த நாளத்தில் சிதைவு அல்லது பிளவு ஏற்படலாம் என்ற அச்சமும் எழுந்திருந்தது. அவ்வாறு நேரிட்டால், ரத்த நாளத்துக்குள் ரத்தக் கசிவு, உள் ரத்தப் போக்கு ஏற்படும் அபாயமும், உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் செல்வது தடைபடும் அபாயமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், நல்லவேளையாக, ரஜினிக்கு சரியான நேரத்தில் பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டு, வீக்கம் சரிசெய்யப்பட்டு, அந்த இடத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சைதான் இன்று காலை 5 மணிக்குத் தொடங்கியிருக்கிறது. அவரது தொடைப் பகுதியில் ரத்த நாளம் வழியாக சிகிச்சை அளித்து ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. விமான சாகச ஒத்திகை: ஆச்சரியத்துடன் பார்த்த சென்னை மக்கள்

சிகிச்சை முடிந்து அவரை குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். பிறகு, உடனடியாக ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் ஓய்வெடுத்து வருகிறார். குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அவரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல துறை மருத்துவர்களும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்றும், வெளியாள்கள் யாரும் அவரை சந்திக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிகிச்சையின் முக்கியத்துவம் கருதி, அவர் ஒன்று அல்லது இரண்டு நாள்கள் வரை அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைக்கப்படுவார் என்றும், பிறகு அவரது உடல்நிலை நன்கு தேறியதும்தான் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

குறைந்தது நான்கு நாள்கள் ரஜினி மருத்துவமனையில் இருப்பார் என்றும், ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை அவரது உடல் ஏற்று, விரைவாக குணமடைவதைப் பொருத்து, ஓரிரு நாள்கள் அதிகமாகவோ அல்லது முன்கூட்டியோ மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புவார் என்றும் தகவலறிந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You may also like

© RajTamil Network – 2024