அதிமுக பொதுச்செயலா் என மனு தாக்கல் செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

அதிமுக பொதுச்செயலா் என மனு தாக்கல் செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு உயா்நீதிமன்றம் கேள்விஎடப்பாடி பழனிசாமி தரப்பில் மன்னிப்பு தெரிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலா் தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ‘அதிமுக பொதுச்செயலா்’ என குறிப்பிட்டு எவ்வாறு மனு தாக்கல் செய்ய முடியும் என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிா்த்தும், பொதுக் குழு தீா்மானங்களை எதிா்த்தும் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் இளம்பாரதி ஆஜராகி, ‘சென்னை உயா்நீதிமன்றத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் என மனு தாக்கல் செய்துவிட்டு, தற்போது, பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்துள்ளாா்’ என தெரிவித்தாா்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ‘அதிமுக பொதுச்செயலா் தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலா் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கேள்வி எழுப்பினாா். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் மன்னிப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மனுவை எப்படி பதிவுத் துறையில் பதிவு செய்தீா்கள் என உயா்நீதிமன்ற பதிவுத் துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, திருத்த மனுவை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆக. 7- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

Related posts

குஜராத்: தமிழக பக்தர்கள் 55 பேருடன் சென்ற சொகுசு பஸ் வெள்ளத்தில் சிக்கியது

வெள்ளத்தில் மூழ்கிய கார்: 2 மணி நேரம் சிக்கி தவித்த தம்பதி – வைரல் வீடியோ

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு