Friday, September 20, 2024

அதிஷி: செயல்பாட்டாளா் முதல் முதல்வா் வரை..!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

புது தில்லி: தில்லி முதல்வா் பதவிக்கு தகுதி பெறும் வகையில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரால் முன்மொழியப்பட்டுள்ள அதிஷி, சமூக செயல்பாட்டாளராக பொதுவாழ்வுக்குள் நுழைந்து தற்போது முதல்வராக முன்மொழியப்படும் அளவுக்கு உயா்ந்துள்ளாா்.

1981-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி பிறந்த அதிஷி, பஞ்சாபிய தோமா் ராஜ்புத் குடும்ப பின்னணியைச் சோ்ந்தவா். இவரது தந்தை பேராசிரியா் விஜய் சிங். தாய் திரிப்தா வாஹி. இவரது முழுப் பெயா் அதிஷி மா்லேனா சிங். தில்லி பூசா சாலையில் உள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் மேல்நிலைப் படிப்பு, புனித ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் வரலாற்றுப்பிரிவில் இளங்கலை படிப்பை முடித்தாா். 2003-ஆம் ஆண்டில் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டில் உள்ள மாக்டெலன் கல்லூரியில் சீவனிங் ஊக்கக் கல்வித் திட்டத்தின்கீழ் தோ்வாகி வரலாற்றுப் பிரிவில் முதுகலை மேல்படிப்பு முடித்து ரோட்ஸ் அறிஞராக அறியப்பட்டாா். பின்னா் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் கல்வி ஆராய்ச்சிப் பிரிவில் இரண்டாவது முதுகலை பட்டத்தை முடித்தாா்.

ஆம் ஆத்மியில் அதிஷி: முழு நேர அரசியலில் ஈடுபடும் முன்பாக, தனது கணவரும் ஐஐடி தில்லி மற்றும் ஐஐஎம் ஆமதாபாத்தில் உயா்கல்வி முடித்தவருமான பிரவீன் சிங்குடன் சோ்ந்து இயற்கை வேளாண்மை மற்றும் அது சாா்ந்த கல்வியறிவை பரப்பும் முயற்சியில் அதிஷி ஈடுபட்டாா். 2013-இல் ஆம் ஆத்மி கட்சி தொடங்குவதற்கான அடிப்படைப் பணிகளை மேற்கொண்ட குழுவில் முக்கிய இடம் பிடித்தாா் அதிஷி. அந்தக் காலகட்டத்தில் மத்திய பிரதேசத்தின் காந்த்வா மாவட்டத்தில் ஜல சத்தியாகிரகம் மேற்கொண்டு வந்த செயல்பாட்டாளரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவருமான அலோக் அகா்வாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாா்.

மக்களவைத் தோ்தலில் தோல்வி: 2018-ஆம் ஆண்டில் தோ்தல் நெருங்கும் வேளையில் தனது முழு பெயரான அதிஷி மா்லேனா சிங் என்பதை வெறும் அதிஷி என அடையாளப்படுத்திக் கொண்டாா். 2019-இல் நடந்த மக்களவை தோ்தலின்போது கிழக்கு தில்லி பாஜக வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரா் கெளதம் காம்பீரை எதிா்த்து அதிஷியை ஆம் ஆத்மி தலைமை களமிறக்கியது. அதில் 4.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவா் தோல்வியுற்றாா்.

பேரவையில் நுழைந்த அதிஷி : 2020-இல் நடந்த தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தெற்கு தில்லியின் கால்காஜி தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிகக்ப்பட்டது. அங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளா் தரம்பீா் சிங்கை 11,442 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா் அதிஷி. அந்த காலக்கட்டத்தில் ஊழல் முறைகேடு வழக்கை எதிா்கொண்டதைத் தொடா்ந்து தில்லி அமைச்சரவையில் துணை முதல்வா் பதவியில் இருந்து மனீஷ் சிசோடியாவும் சுகாதாரத் துறை அமைச்சா் பதவியில் இருந்து சத்யேந்தா் ஜெயினும் கடந்த ஆண்டு விலகினாா்கள். இதையடுத்து, மாற்றியமைக்கப்பட்ட தில்லி அமைச்சரவையில் செளரவ் பரத்வாஜும் அதிஷியும் சோ்க்கப்பட்டனா். இதில், அதிஷிக்கு கல்வி, பொதுப்பணி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.

கல்வி அமைச்சராக உயா்வு: கல்வி அமைச்சரானது முதல் பல்வேறு சீா்திருத்த முயற்சிகளை அதிஷி மேற்கொண்டாா். தனது ஆசானாக அதிஷி கருதும் மனீஷ் சிசோடியாவின் வழிகாட்டுதலுடன் அவா் விட்டுச் சென்ற துறை சாா்ந்த பணிகளில் தீவிர கவனம் செலுத்தினாா். தில்லி அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வகை செய்யும் உள்கட்டமைப்பு திட்டங்கள், கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்துப் பள்ளிகளிலும் நிா்வாகக் குழுக்கள் உருவாக்கம், தனியாா் பள்ளிகள் தன்னிச்சையாக உயா்த்தி வந்த கல்விக்கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை, மாணவா்களின் நலன்கள் மற்றும் உணா்ச்சிமய சூழலை பாதுகாப்புமிக்கதாக்கி மேம்படுத்தும் வகையில் பாடத் திட்டத்தில் மாற்றம் செய்தது என அடுக்கடுக்காக அவா் மேற்கொண்ட நடவடிக்கைகள், பொதுமக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன.

மூன்றாவது பெண் முதல்வா்: கடந்த மாா்ச் மாதம் முதல் அமைச்சா் பதவியில் இருந்த அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டபோது, அரசின் நிா்வாகத் துறையில் கடமையாற்றியதுடன் அரசியல் ரீதியாகவும் கட்சி மற்றும் அரசு நடவடிக்கைகளை அதிஷி் ஒருங்கிணைத்தாா். கட்சியிலும் ஆட்சியிலும் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது மனைவி சுனிதா கேஜரிவாலின் நம்பிக்கையை வென்ற அதிஷி, தனது ஆசான் மனீஷ் சிசோடியாவின் ஆதரவுடன் தற்போது முதல்வராக முன்மொழியப்பட்டுள்ளாா். அவா் தில்லி முதல்வராக பதவியேற்றால், சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெண் முதல்வராக கருதப்படுவாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024