Monday, September 23, 2024

அனைத்து மீனவர்களையும் விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பது வாடிக்கையாக இருக்கிறது. இதனைத் தடுக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செப். 23) கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 21-9-2024 அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுத்திட நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் வசூலிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள், IND-TN-16-MO-3451, IND-TN-16-MO-1544 ஆகிய பதிவெண்களைக் கொண்ட இரண்டு படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகு என மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கடந்த 21.09.2024 அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ஆழ்ந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | இரு நாடுகளும் இணைந்து செயல்படட்டும்: இலங்கை அதிபர் அநுரகுமாரவுக்கு ராகுல் வாழ்த்து!

தான் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் போது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கவலைபடத் தெரிவித்துள்ள முதல்வர், கைது செய்யப்படும் மீனவர்களிடம், அவர்களது சக்திக்கு மீறிய அபராதங்களை இலங்கை நீதிமன்றங்கள் விதித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகள் இதுபோன்று கைது செய்வதைத் தடுத்திட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே, கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டதுடன் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024