Saturday, September 21, 2024

அப்படி செய்திருந்தால் நிச்சயம் இந்திய அணியை வீழ்த்தி இருப்போம் – இலங்கை கேப்டன்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

இலங்கை – இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சமனில் முடிவடைந்தது.

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வெல்லலகே 67, நிசாங்கா 56 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 231 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதே போல ஆட்டம் சமனில் இருந்தபோது கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்த நிலையில், ஷிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழந்தனர். இதனால் இந்த ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா மற்றும் அசலன்கா தலா 3 விக்கெட்டுகளும், வெல்லலகே 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஆட்டம் சமனில் முடிந்தது குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறுகையில், "இந்த போட்டியில் நிச்சயம் எங்களால் இந்திய அணியை சுருட்ட முடியும் என்று நினைத்தோம். ஆனாலும் நாங்கள் இன்னும் சற்று அதிகமாக சிறப்பாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணியை வீழ்த்தி இருக்க முடியும். இருப்பினும் அவர்களை 230 ரன்களில் தடுத்து நிறுத்தியதில் மகிழ்ச்சி. இந்த போட்டியின் மதிய வேளையில் பந்து நன்றாக திரும்பியது.

ஆனால் விளக்கு ஒளியின் கீழ் விளையாடியபோது பேட்டுக்கு ஈசியாக சென்றது. இருந்தாலும் இடது கை ஆட்டக்காரர்கள் களத்தில் இருக்கும்போது என்னால் சிறப்பாக பந்துவீச முடியும் என்று நினைத்தேன். அந்த வகையில் இந்த போட்டி இறுதியில் சமனில் முடிந்தது மகிழ்ச்சி தான். களத்தில் எங்களது அணியின் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக துனித் வெல்லாலகே மற்றும் பதும் நிசாங்கா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024