Sunday, September 22, 2024

அமலாக்கத் துறை வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்!

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

அமலாக்கத் துறை வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கில், திமுக எம்.பி ஆ.ராசா சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (ஆக.19) நேரில் ஆஜரானார்.

நீலகிரி தொகுதி திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டி சிபிஐ கடந்த 2015-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். அதில் குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் திமுக எம்பியான ஆ.ராசா வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக ரூ. 5.53 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் ஆ.ராசா மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி, மற்றும் கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டெட், மங்கள் டெக் பார்க் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எழில்வேலவன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ,ராஜா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு வழக்கு ஆவணங்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் செப்.18-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஆ.ராசா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024