அமெரிக்காவின் பொருளாதார நிலை மோசம் – டிரம்ப் குற்றச்சாட்டு; பதிலடி கொடுத்த கமலா ஹாரிஸ்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக, முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் பங்கேற்கும் நேரடி விவாதம் பென்சில்வேனியா மாகாணத்தில் பிலடெல்பியாவில், இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கி நடந்தது. ஏ.பி.சி. நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த விவாதத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன்-ரஷியா இடையேயான போர், அமெரிக்க நாட்டின் பணவீக்கம், கருக்கலைப்பு விவகாரம் உள்ளிட்ட விசயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

இந்த விவாதம் 90 நிமிடங்கள் வரை நடைபெற்றது. எனினும், நிகழ்ச்சியில் பங்கேற்க பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. விவாத நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப் பேசும்போது, விற்பனை வரி எதனையும் நான் விதிக்கவில்லை. மற்ற நாடுகளுக்கே நாம் வரிகளை விதித்து வருகிறோம். சீனாவிடம் இருந்து கோடிக்கணக்கான டாலர்களை நாம் பெற்று வருகிறோம் என்பது உங்களுக்கு தெரிந்த விசயம்.

ஆனால் இன்றோ, நம்முடைய பொருளாதாரம் பயங்கர நிலையில் உள்ளது. ஏனெனில் பணவீக்கம் தாக்கமே அதற்கு பெரிய காரணம். நம்முடைய அமெரிக்க வரலாற்றிலேயே படுமோசம் என்றளவில் பணவீக்கம் காணப்படுகிறது என்றார். அமெரிக்காவின் பொருளாதார நிலை மோசமடைந்து உள்ளது என கூறிய டிரம்ப், நடுத்தர வகுப்பு மக்கள் மட்டுமின்றி ஒவ்வொரு வகுப்பினரும் பொருளாதார பேரிடரில் சிக்கி கொண்டுள்ளனர் என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, நம்முடைய நாட்டிற்கு சிறைகளில் இருந்தும், மனநல காப்பகங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து சேர்கின்றனர். அவர்கள் நம்முடைய வேலைகளை எடுத்து கொள்கின்றனர். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் ஹிஸ்பானிக்குகள் அவற்றை எடுத்து கொள்கின்றனர். அமெரிக்காவின் பல்வேறு நகரங்களை பாருங்கள், ஓஹியோ, கொலராடோ மாகாணங்களில் உள்ள நகரங்களை அவர்கள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

இந்த மக்களையே கமலாவும், பைடனும் நம்முடைய நாட்டிற்குள் வர அனுமதித்து உள்ளனர். அவர்கள் நாட்டை அழித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆபத்து நிறைந்தவர்கள். அதிகளவிலான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள். நம்முடைய நாட்டின் வரலாற்றிலேயே, மிக சிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக நான் உருவாக்கி வைத்திருந்தேன். இதனை மீண்டும் நான் உருவாக்குவேன். இன்னும் சிறப்பாக ஆக்குவேன் என்று பேசியுள்ளார்.

இதற்கு பதிலளித்து பேசிய கமலா ஹாரிஸ், டிரம்பின் திட்டங்களால் பணவீக்கம் அதிகரித்து, நாட்டை மந்தநிலைக்கு கொண்டு சென்று விடும் என நோபல் பரிசு பெற்ற 16 பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர் என பேசியுள்ளார்.

டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால், உலக அளவில் அமெரிக்க பொருளாதாரத்தில் எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்றும் அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதாரத்திலும் ஸ்திரத்தன்மையற்ற நிலையை ஏற்படுத்தும் என அந்த நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். டிரம்பின் கொள்கைகளை விட கமலா ஹாரிசின் கொள்கைகள் பரந்த அளவில் உயர்வானவை என தங்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ள அவர்கள், டிரம்பின் கொள்கையால் 2025-ம் ஆண்டு மத்தியில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்பது பற்றிய கணிப்பு எதனையும் குறிப்பிடவில்லை.

தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், டிரம்ப் அவருடைய பதவி காலத்தில் வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தி விட்டு சென்று விட்டார். ஒரு நூற்றாண்டில் பொது சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் வகையில் பெருந்தொற்றில் விட்டு விட்டு அவர் சென்றார். நம்முடைய ஜனநாயகத்தின் மீதும் கடுமையான தாக்குதல் நடந்தது.

என்னுடைய திட்டம் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும். உண்மையில் மக்களுக்கான திட்டம் எதுவும் டிரம்பிடம் இல்லை. ஏனெனில் அவரை பாதுகாப்பதிலேயே அவருக்கு ஆர்வம் அதிகம். அதனை விடுத்து உங்களை அவர் கவனிக்கமாட்டார் என கமலா பேசியுள்ளார்.

டிரம்பின் நிர்வாகம், வர்த்தக பற்றாக்குறை என்ற நிலைக்கு கொண்டு சென்றது. சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டார். கொரோனா பெருந்தொற்றின்போது, அதன் தோற்றம் பற்றிய தகவல்களை வெளியிடும்படி கேட்டபோது, சீனா அதனை கவனத்தில் கொள்ளவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த விசயம். ஆனால், டிரம்ப் என்ன கூறினார்? சீன அதிபர் ஜின்பிங்குக்கு நன்றி என எக்ஸ் பதிவில் கூறினார் என்று கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024