அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற துளசேந்திரபுரத்தில் சிறப்புப் பூஜை
திருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர்.
ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் ஸ்டெனோகிராபராக இருந்தார். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார். ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது ஜாம்பியா நாட்டுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்து பின்னர் அமெரிக்காவில் பி.வி கோபாலன் குடியேறினார்.
இவரது இரண்டாவது மகளான சியாமளாவுக்கும், ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இன்று நடைபெறும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்களில் சிலர் சொந்த கிராமமான துளசேந்திரபுரத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும், அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலா ஹாரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார்.
இந்த நிலையில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி துளசேந்திரபுரம் கிராம மக்கள் குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் செய்தனர். சிறப்பு பூஜையில் தர்ம சாஸ்தாவுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த பூஜையில் கமலா ஹாரிஸின் தோழிகள் எனக் கூறி அமெரிக்காவை சேர்ந்த இருவர், லண்டனைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பெண்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்ற சுதாகர் கூறும்போது, “துணை ஜனாதிபதி தேர்தலில் கடந்த முறை கமலா போட்டியிட்ட போதே இதே குலதெய்வ கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தோம் அவர் வெற்றி பெற்றார். இந்த முறையும் வெற்றி பெறுவார்.
வெற்றி பெற்று துளசேந்திரபுரம் கிராமத்துக்கு வருகை தந்து மக்களை சந்திக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். பூர்விக ஊரான துளசேந்திரபுரத்தில் கமலா ஹாரிஸுக்காக கிராம மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம் என்கின்ற செய்தி அமெரிக்காவையும் உலக நாடுகளையும் எட்டிய நிலையில் அமெரிக்காவில் இருந்தும், லண்டனில் இருந்தும் மூன்று பெண்கள் நேரில் வருகை தந்து சிறப்பு பூஜையில் பங்கேற்றுள்ளனர். இதுவே எங்களது கிராமத்துக்கு கமலா ஹாரிஸ் நிச்சயம் வருவார் என்பதற்கான சமிக்ஞையாக உள்ளது” என்றார்.