Saturday, September 21, 2024

அமெரிக்க அதிபர் தேர்தல்.. பைடனை விட கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: சி.என்.என். கருத்துக்கணிப்பு

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு உள்ளதைவிட கமலா ஹாரிசுக்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு கணிசமாக உள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களம் காண்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான முதல் நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த மாதம் 28-ம் தேதி நடந்தது. விவாதத்தின்போது ஜோ பைடன் பலமுறை பேச தடுமாறினார். சில நொடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். இந்த நிலைமையில் பைடன் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.

அதன்பின்னர் பைடன் திங்கட்கிழமை ஆற்றிய உரையிலும்கூட டெலிபிராம்டரில் END OF THE QUOTE – உரை முடிந்தது என்று எழுதப்பட்டிருந்ததையும் சேர்த்து வாசித்தது சர்ச்சையாகியுள்ளது.

இதனால் பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே நல்லது என்று அவரது கட்சிக்குள்ளிருப்பவர்களே பேசத் தொடங்கினர். மேலும் பைடனுக்கு பதில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா அதிபர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்றும் சிலர் விரும்புகின்றனர். பைடனின் தடுமாற்றம் அமெரிக்க மக்களிடையேயும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சி.என்.என். தொலைக்காட்சி புதிய கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கருத்துக் கணிப்பின்போது டிரம்பா, பைடனா? என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் டிரம்புக்கும் 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவளித்துள்ளனர். 6 சதவீத வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலை பெற்றார். அதேசமயம் டிரம்பா, கமலா ஹாரிசா? என்ற கேள்விக்கு 47 சதவீத வாக்காளர்கள் டிரம்புக்கு ஆதரவாகவும். 45 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகலாம் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். டிரம்பை விட வெறும் 2 சதவீத வித்தியாசத்தில் மட்டுமே கமலா ஹாரிஸ் உள்ளார்.

டிரம்பை விட மிட்செல் ஒபாமா 11 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். ஆனால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், பைடனுக்கு உள்ளதைவிட கமலா ஹாரிசுக்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு கணிசமாக உள்ளது. எனவே அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக, கமலா ஹாரிசை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024