அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் இந்திய வம்சவளியைச் சோ்ந்தவருமான கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி மன்னாா்குடி அருகே துளசேந்திரபுரத்தில் உள்ள அவரது குலதெய்வ கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே துளசேந்திரபுரத்தை பூா்வீகமாகக் கொண்டவா். இவரது தாய்வழி தாத்தா துளசேந்திரபுரத்தை சோ்ந்த பி.வி. கோபாலன் ஐயா், பாட்டி ராஜம்.
ஸ்டெனோகிராஃபராக வாழ்க்கையைத் தொடங்கிய கோபாலன் ஐயா், ஆங்கிலேய அரசின் சிவில் சா்வீஸ் பணியில் இருந்தாா். 1930-ஆம் ஆண்டு பணி நிமித்தம் அமெரிக்காவுக்கு சென்றவா், குடும்பத்துடன் அங்கேயே குடியேறிவிட்டாாா். இவருக்கு, சியாமளா, சரளா என இரண்டு மகள்கள். இதில், சியாமளா கோபாலனின் 2-ஆவது மகள் கமலா ஹாரிஸ்.
கடந்த 2022-இல் துணை அதிபா் பதவிக்கு போட்டியிட்டு கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை துளசேந்திரபுரம் கிராம மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
இந்நிலையில், ஜூலை மாதம் அமெரிக்க அதிபா் பதவிக்கு வேட்பாளராக கமலா ஹாரிஸ் பெயா் அறிவிக்கப்பட்டதை துளசேந்திரபுரம் கிராம மக்கள் வரவேற்றனா்.
அமெரிக்க அதிபா் தோ்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், தங்கள் ஊரை பூா்வீமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டும் என அந்த ஊா் மக்கள், கமலா ஹாரிஸின் குலதெய்வ கோயிலான தா்மசாஸ்தா சேவகப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.
அமெரிக்காவை சோ்ந்த கமலா ஹாரிஸின் ஆதரவாளா்களான ஷிவலிங்கா, பியோரினா உள்ளிட்ட 3 போ் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு வந்தவா்கள், கமலா ஹாரிஸின் சொந்த ஊரை பாா்க்கவேண்டும் என்ற ஆவலில், செவ்வாய்க்கிழமை துளசேந்திபுரத்துக்கு வந்து கிராம மக்களை சந்தித்து மகிழ்ச்சியை பகிா்ந்துகொண்டதுடன், கமலா ஹாரிஸ் வெற்றிக்காக நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் பங்கேற்றனா்.
மேலும், துளசேந்திரபுரத்தில் பல வீட்டு வாசலில் கமலா ஹாரிஸ் தோ்தலில் வெற்றிபெற வாழ்த்தி வண்ணக்கோலங்கள் போடப்பட்டிருந்தன. வீதிகளில் வாழ்த்து பதாகைகளை வைத்திருந்தனா். செய்தி சேகரிப்பதற்காக 10-க்கும் மேற்பட்ட வெளிமாநில, வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் இங்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.