Friday, September 20, 2024

அமைச்சரவை மாற்றமா? – முதல்வர் ஸ்டாலின் மறுப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

அமைச்சரவை மாற்றமா? – முதல்வர் ஸ்டாலின் மறுப்பு

சென்னை: தமிழக அமைச்சரவையில் மாற்றம் என பரபரப்பாக தகவல் வெளியான நிலையில், ‘எனக்கு தகவல் வரவில்லை’ என்று முதல்வர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் கடந்த 5-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வரிடம் செய்தியாளர்கள், ‘‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறதே’’ என்று கேட்டதற்கு, ‘‘அந்த கோரிக்கை வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை’’ என்று முதல்வர் பதில் அளித்தார்.

எனினும், ‘எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை மாற்றம் இருக்கும். உதயநிதி உள்ளிட்ட 2 பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும். 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்’ என பல்வேறு விதமான தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. இந்நிலையில், ‘அமைச்சரவை மாற்றத்துக்கான அறிவிப்பு மாலையில் வெளியாகும்’ என்று நேற்று காலை திடீரென தகவல் பரவியது.

சமூக ஊடகங்களில் இந்த தகவல் வேகமாக பரவியது. திமுக சார்ந்த ஊடகங்களும் இந்த தகவலை வெளியிட்டதால் கட்சியினர் உற்சாகமடைந்தனர். இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலர் முருகானந்தம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானதால், பரபரப்பான நிலை நீடித்தது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில், தரம் உயர்த்தப்பட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறையை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார். நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட அவரிடம் செய்தியாளர்கள், ‘‘தமிழக அமைச்சரவை மாற்றம் இருப்பதாக தகவல் வருகிறதே?’’ என்று கேட்டனர். இதற்கு முதல்வர், ‘‘எனக்கு வரவில்லை’’ என்று ஒரே வரியில் பதில் அளித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

You may also like

© RajTamil Network – 2024