Friday, September 20, 2024

“அமைச்சர் அன்பில் மகேஸ் மிரட்டலுக்கு ஆன்மிக பேச்சாளர்கள் அஞ்ச மாட்டார்கள்!” – தமிழக பாஜக கருத்து

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

“அமைச்சர் அன்பில் மகேஸ் மிரட்டலுக்கு ஆன்மிக பேச்சாளர்கள் அஞ்ச மாட்டார்கள்!” – தமிழக பாஜக கருத்து

கோவை: “அமைச்சர் அன்பில் மகேஸ் மிரட்டலுக்கு ஆன்மிக சொற்பொழிவாளர்களும் அஞ்ச மாட்டார்கள். இந்து மதமும் அஞ்சாது,” என்று அசோக் நகர் அரசுப் பள்ளி சம்பவத்துக்கு பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

ஆசிரியர் தினத்தையொட்டி சென்னையில் உள்ள அசோக் நகர் அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆன்மிக சொற்பொழிவாளர் பேசிய கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது, “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்.

பள்ளி மாணவர்கள் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும். உணர்ச்சிப் பெருக்கில் சிக்கிவிடக் கூடாது. அறிவை செலுத்தி சிந்திக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். மாணவர்கள் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும். மதிப்பெண் மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல; நல்லது, கெட்டது எது என அறிந்து கொள்ளும் பகுத்தறிவு வேண்டும். பள்ளிக்குள் யாரை சிறப்பு விருந்தினராக அனுமதிப்பது என்பதில் பள்ளியில் ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்” என்றார்

இதனிடையே, தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை சமூக வலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி. தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கோவையில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இச்சம்பவம் குறித்தும், அமைச்சரின் எச்சரிக்கை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எஸ்.ஆர்.சேகர், “சென்னை அரசுப் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்வு நடத்தியது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ள கருத்து அவரை விட வயதில் சிறியவரான மகாவிஷ்ணு கொண்டுள்ள முதிர்ச்சி கூட அமைச்சருக்கு இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒரு ரவுடி பேசுவதைப் போல அமைச்சர், மகா விஷ்ணுவுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். இது கண்டிக்கதக்கது.

கடவுள் இல்லை என்ற சித்தாந்தத்தை மனதில் வைத்துக் கொண்டு இந்த விவாகரத்தை அணுகுகின்றனர். இந்த மிரட்டல் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும், தனி மனித சுதந்திரத்துக்கும் எதிரானது. அமைச்சர் அன்பில் மகேஸ் பாவ, புண்ணியங்களை நம்பாதவரா? அவரது தலைவர் கருணாநிதி சிலை முன்பு படையல் போட்டு வணங்குகின்றனரே… அதை எவ்வாறு பார்ப்பது? எனவே, இவர்கள் வீட்டில் ஒரு வேஷம், வெளியில் ஒரு வேஷம் போடுகின்றனர்.

திமுக அரசு ஆன்மிக சொற்பொழி நடத்துபவர்களை மிரட்டி பார்க்கிறது. இதற்கு ஆன்மிக சொற்பொழிவாளர்களும் அஞ்ச மாட்டார்கள், இந்து மதமும் அஞ்சாது. இந்து மதத்தின் மீதும், திருவள்ளுவர் மீதும் திமுக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாஜக எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்,” என்று அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024