Monday, September 23, 2024

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

கடந்த சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வருவாய்த்துறை அமைச்சராக சாத்தூர் ராமச்சந்திரன் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 2006-2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சுகாதாரம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அவரும், அவருடைய மனைவி ஆதிலட்சுமி, தொழில் அதிபர் சண்முக மூர்த்தி ஆகிய 3 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12 ஆண்டாக நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கடந்த 2016-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் சண்முக மூர்த்தி ஆகியோரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கில் ஆகஸ்ட் 7-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர்கள் உள்ளிட்டோரை விடுவித்தது செல்லாது என தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செப்டம்பர் 9-ம் தேதியும், அமைச்சர் தங்கம் தென்னரசு 11-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து வழக்கு ஆவணங்கள் கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வந்தன. இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி அமைச்சர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாரியப்பன், வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்த ஆணையை சமர்ப்பித்து, வழக்கை விசாரிக்கக்கூடாது என வாதிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024