லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா கடந்த ஜனவரி 22-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கானோர் அயோத்தி ராமர் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பராமரிப்பை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த விளக்குகளின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அயோத்தி கோவில் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த வண்ண விளக்குகளில் 3 ஆயிரத்து 800 விளக்குகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 36 லேசர் விளக்குகளும் திருடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 19-ந்தேதி கணக்கெடுப்பின்போது அனைத்து விளக்குகளும் இருந்த நிலையில் அதன்பின் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பாதிக்கும் மேற்பட்ட விளக்குகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட வண்ண விளக்குகளின் மதிப்பு சுமார் 50 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அயோத்தியில் திருடர்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைத்துள்ளனர் என உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"அயோத்தியில் திருடர்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைத்துள்ளனர். அங்கு மின்கம்பங்கள் மின்சாரம் இல்லாமல் நிற்பதாக ஏற்கனவே பொதுமக்கள் கூறி வந்தனர். பா.ஜ.க. ஆட்சி என்றால் 'எங்கும் இருள்' என்று பொருள். இன்றைய அயோத்தி பா.ஜ.க. வேண்டாம் என்கிறது."
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.