Sunday, October 6, 2024

அரசின் மகளிர் திட்டங்களை கூறி உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க திமுகவினருக்கு அமைச்சர் பி.மூர்த்தி வலியுறுத்தல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

அரசின் மகளிர் திட்டங்களை கூறி உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க திமுகவினருக்கு அமைச்சர் பி.மூர்த்தி வலியுறுத்தல்

மதுரை: திமுக ஆட்சியின் மகளிர் நலத்திட்டங்களை கூறி உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என, அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

மதுரை மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் திருப்பாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை நடந்தது. மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஹெலன் டேவிசன், மகளிர் அணி மண்டல பொறுப்பாளர் முன்னாள் எம்.பி., பவானி ராஜேந்திரன் தலைமை வகித்தனர். வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஆ.வெங்கடேசன் எம்எல்ஏ., மாநகர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரவண புவனேஸ்வரி, தெற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரமிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கே.உமா சிங்கத்தேவன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர், வணிகவரி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினர்.

அமைச்சர் பி.மூர்த்தி பேசியது: தமிழ்நாட்டில் மகளிருக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார். அவரது வழியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கி திட்டங்களை நிறைவேற்றுகிறார். மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அரசின் சாதனைகளான மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாத உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட மகளிர் சிறப்பு திட்டங்கள் மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற திமுக அரசின் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள், பெண்களிடம் கொண்டு சேர்ப்பதில் மகளிர் அணியினரும், மகளிர் தொண்டர் அணியினரும் செயல்பட வேண்டும்.

இது போன்ற நலத்திட்டங்களை எடுத்துக் கூறி , மகளிர் அணியிலும், தொண்டர் அணியிலும் அதிகமான உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் வகையில் பாடுபட வேண்டும். இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் வாசுகி சசிக்குமார் உள்ளிட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் மற்றும் வலைதளப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024