மகாராஷ்டிரத்தின் ராகுல் காந்தி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஊடகங்களை அனுமதிக்கவில்லை என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்ட நிகழ்ச்சி அரங்கில் கதவுகள் மூடப்பட்டு, ஊடகங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இதுகுறித்து, மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே பேசியதாவது, “நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் கதவுகள் ஏன் மூடப்பட்டது? நிகழ்ச்சியில் ஊடகங்களும் அனுமதிக்கப்படவில்லை. ஒருபுறம், அரசியலமைப்பைப் பாதுகாப்பதைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள்; மறுபுறம், அரசியலமைப்பால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை ஒடுக்குகிறார்கள்.
இதன்மூலம், டாக்டர் அம்பேத்கரின் சித்தாந்தத்தை ராகுல் எதிர்ப்பதும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதைப்போல் நாடகமாடுவதும் தெரிகிறது. இதுபோன்ற கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக 40 அலுவலக பொறுப்பாளர்களை பாஜக ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது.
இதையும் படிக்க:அமெரிக்க அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்: இனி தங்கம் விலை உயருமா?
தேர்தல் பிரச்சாரத்தின்போது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், மேலும் பலர் மீது இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். மேலும், 165க்கும் மேற்பட்ட நகர்ப்புற நக்சல் அமைப்புகள், மக்களிடையே நாட்டிற்கு எதிரான எதிர்மறை எண்ணங்களைத் தூண்டி, சூழ்நிலையைக் கெடுப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில், சந்திரசேகரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கூறியதாவது, “நிகழ்ச்சி அரங்கில் இடம் இல்லாததால்தான் ஊடகங்களுக்கு இடமளிக்க முடியவில்லை; ராகுல் காந்தியின் உரை அனைவருக்கும் ஒளிபரப்பப்படும்.
இது பல்வேறு சமூக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சமூக நிகழ்ச்சி; அரசியல் நிகழ்ச்சி அல்ல. ஆனால், இந்த சம்பவம் குறித்து பாஜக தவறான செய்திகளை பரப்புகிறது’’ என்று தெரிவித்துள்ளனர்.