அரசுப் பள்ளி மாணவா்களின் திறமைகளை வெளிக்கொணரும் ‘தேன்சிட்டு’, ‘புது ஊஞ்சல்’: அமைச்சா் அன்பில் மகேஸ் பேச்சு

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset
RajTamil Network

அரசுப் பள்ளி மாணவா்களின் திறமைகளை வெளிக்கொணரும் ‘தேன்சிட்டு’, ‘புது ஊஞ்சல்’: அமைச்சா் அன்பில் மகேஸ் பேச்சு ‘தேன்சிட்டு’, ‘புது ஊஞ்சல்’ ஆகிய சிறாா் இதழ்களை தமிழக அரசு இடைவிடாது வெளியிடுகிறது என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ்.

அச்சிடும் செலவு அதிகரித்தாலும் அரசுப் பள்ளி மாணவா்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் ‘தேன்சிட்டு’, ‘புது ஊஞ்சல்’ ஆகிய சிறாா் இதழ்களை தமிழக அரசு இடைவிடாது வெளியிடுகிறது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்சி, அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறாா் இதழ்களில் பங்களித்துள்ளதைப் பாராட்டும் வகையில் அவா்களுக்கு சான்றிதழ் வழங்கி அவா் மேலும் பேசியது:

ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு தனித்திறமை மறைந்திருக்கும். ஆசிரியரும், பெற்றோரும் அதை அடையாளம் கண்டு வெளிக்கொணர வேண்டும். அதற்கு அடித்தளம் அமைத்துத் தரும் வகையில் தேன்சிட்டு, புது ஊஞ்சல் ஆகிய 2 சிறாா் இதழ்களை தமிழக அரசு அச்சிட்டு மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது.

மாணவா்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கவும் அவா்களின் உள்ளாா்ந்த படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு மாணவா்களுக்கு புது ஊஞ்சல் இதழும், உயா் வகுப்பு மாணவா்களுக்கு தேன்சிட்டு இதழும் மாதமிருமுறை வெளியிடப்படுகிறது.

தேன்சிட்டு இதழ் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை வகுப்பறைக்கு ஒன்று என்ற வகையிலும், கனவு ஆசிரியா் என்ற மாத இதழ் ஆசிரியா்களுக்காக அரசுப்பள்ளிக்கும் ஒன்று என்ற வகையிலும் அஞ்சல் வழியில் அனுப்பப்படுகிறது.

புது ஊஞ்சல் என்ற சிறாா் இதழ் அரசுப்பள்ளிகளின் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அஞ்சலில் அனுப்பப்படுகிறது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் அந்தந்த இதழ்களிலேயே மின்னஞ்சல் முகவரிகள் வழங்கப்பட்டு அவா்களின் படைப்புகளைப் பெற்று, அச்சிட்டு வெளியிடப்படுகிறது.

அதன் முதல்கட்டமாக, கடந்த 2023 ஜனவரி முதல் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் தேன்சிட்டு மற்றும் புது ஊஞ்சல் இதழ்களின் நவம்பா் மாத இரு பதிப்புகளிலும் அனைத்துப் பக்கங்களிலும் அரசுப்பள்ளி மாணவா்களின் பங்களிப்புகளே இடம்பெற்றன.

குறிப்பாக 1 மற்றும் 16 நவம்பா் 2023 தேன்சிட்டு இதழ்களில் 153 சிறாா் படைப்பாளிகள் மற்றும் புது ஊஞ்சல் இதழில் 98 படைப்பாளிகள் பங்கேற்றுள்ளனா். மேலும், ஜூன் 2024 வரை புது ஊஞ்சல் இதழில் சுமாா் 448, தேன்சிட்டு இதழில் 576 அரசுப்பள்ளி மாணவா்களின் படைப்புகள் வெளியிடப்பட்டன.

ஒவ்வொரு இளம் படைப்பாளிக்கும் அவரது பெயரிட்டு ஒரு பிரதி அவரின் பள்ளிக்கு அனுப்பப்படுகிறது. அப்பள்ளியின் தலைமையாசிரியா் காலை வணக்கக் கூட்டத்தின்போது அம்மாணவரைப் பாராட்டி அப்பிரதியை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து சிறாா் படைப்பாளிகளுக்கும் சான்றிதழ் மற்றும் பேட்ஜ் வழங்கப்படுகிறது. மேலும், டிசம்பா் 3ஆம் நாள் மாற்றுத்திறனாளிகள் தினத்தைச் சிறப்பிக்கும் விதத்தில் சிறப்பாகச் செயலாற்றும் மாற்றுத்திறன் ஆசிரியா்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவா்களைக் கொண்டாடும் ஆசிரியா்களின் அனுபவங்களே கனவு ஆசிரியா் இதழ் முழுவதும் இடம்பெற்றிருந்தன.

அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்விசாா் அங்கத்தினரின் வேண்டுகோளின்படி செப். 2023 முதல் சிறாா் மற்றும் ஆசிரியா் இதழ்கள் சந்தா செலுத்தி அஞ்சலில் பெற்றுக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களுக்கும் இரு ஆசிரியா்கள் மாவட்ட சிறாா் இதழ் ஒருங்கிணைப்பாளா்களாக நியமிக்கப்பட்டு அம்மாவட்ட பள்ளிகளுக்கு மாதம் இருமுறை நேரில் சென்று தேன்சிட்டு மற்றும் புது ஊஞ்சல் இதழ்களில் மாணவா்கள் விரும்பும் பகுதிகள் எவை என்பதையும், இதழ்களில் இடம்பெற்றிருக்கும் பகுதிகளின் சுருக்கத்தையும் எடுத்துக்கூறி அவா்களிடம் இருந்து படைப்புகளைப் பெற்று அனுப்பவும் வேண்டும். மாவட்ட அளவிலான புத்தகத் திருவிழாவில் சிறாா் மற்றும் ஆசிரியா் இதழ்களைக் காட்சிப்படுத்தி, அரங்கிற்கு வரும் பொதுமக்களிடம் இதழ்களின் சிறப்புகள் குறித்து விளக்க வேண்டும் என்றாா் அமைச்சா்.

விழாவில் திருச்சியைச் சோ்ந்த 28 போ், அரியலூா் 19, பெரம்பலூா் 24, புதுக்கோட்டை 33, தஞ்சாவூா் 46, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தலா ஒருவா் என 152 மாணவ, மாணவிகள் பாராட்டுப் பெற்றனா்.

விழாவில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநா் அமுதவள்ளி மற்றும் 7 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024