Friday, September 20, 2024

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம்: 15-ந் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

காலை உணவுத் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

சென்னை,

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 'முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்' எனும் திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக, 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.33 கோடியே 56 லட்சம் செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டம் கடல் தாண்டியும் பிரபலம் அடைந்த நிலையில், 2023-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்து 992 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த திட்டத்தை தமிழக ஊரகப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சட்டசபையிலும் எம்.எல்.ஏ.க்கள் பலர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 2 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.600 கோடியில், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர் பிறந்த நாளான வரும் 15-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024