Thursday, November 7, 2024

அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சென்னை ,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நோயாளி, மருத்துவர், மருந்து, நோயாளியின் அருகில் இருக்க வேண்டிய துணை என நான்கும் சேர்ந்ததுதான் மருத்துவம் என்கிறார் திருவள்ளூவர். இந்த நான்கிலே மிக முக்கியமானதாக விளங்குவது மருத்துவர். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருவதன் காரணமாக 'மருத்துவம் இல்லை' என்ற அபாயகரமான நிலையை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது.

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்த நிலை மாறி, இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதுபோல், மருத்துவமனைகளிலும் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வருகிறது. அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நான் பலமுறை அறிக்கைகள் விடுத்தும், அதை தி.மு.க. அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்போது 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தற்போது பணியில் உள்ள 1,000 மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர உள்ளதால், பற்றாக்குறை மருத்துவர்களின் எண்ணிக்கை 6,000-ஆக அதிகரிக்கக்கூடும் என்றும், இந்த ஆண்டு ஓய்வுபெறும் மருத்துவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

அரசு மருத்துவமனைகளில், கிட்டத்தட்ட 35 விழுக்காடு மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக, தற்போது பணியில் இருக்கின்ற மருத்துவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்பட்டதன் விளைவாக, அவர்கள் சோர்வு அடைந்துள்ளதாகவும், அவசர சிகிச்சைகள் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது..

இதேபோன்று, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஆயிரக்கணக்கான பேராசிரியர், இணைப் போராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மருத்துவர்களுக்கான பதவி உயர்வு என்பது பல ஆண்டுகளான நிலுவையில் உள்ளதாகவும், பல மருத்துவர்கள் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில், மருத்துவர்களின் வாழ்க்கையோடும், மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் தி.மு.க. விளையாடிக் கொண்டிருக்கிறது. மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்புவது மற்றும் மருத்துவர்களுக்கான பதவி உயர்வினை அளிப்பது போன்றவற்றை விரைவுபடுத்த வலியுறுத்தி மக்கள் நல்வாழ்வுத் துறை செயலருக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. தி.மு.க. அரசின் இதுபோன்ற மக்கள் விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது

எனவே, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மருத்துவர்களுக்கான பதவி உயர்வினை அளிக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024