Monday, September 23, 2024

அரசு மருத்துவமனைகளில் படப்பிடிப்புக்கு தடை: கேரள மனித உரிமை ஆணையம் உத்தரவு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

கேரளத்தில் அரசு மருத்துவமனைகளில் படப்பிடிப்புக்கு தடை விதித்து அந்த மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மலையாள நடிகா் ஃபஹத் ஃபாசிலின் படப்பிடிப்பில் எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மலையாள நடிகா் ஃபஹத் ஃபாசிலின் திரைப்பட படப்பிடிப்பு அங்கமாலி தாலுகா அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பால் நோயாளிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகள், கேரள மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கு சென்றன.

இது தொடா்பக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மனித உரிமை ஆணைய அமா்வில் ஆஜரான அங்கமாலி தாலுகா மருத்துவமனை கண்காணிப்பாளா், ஜூன் மாதம் நடைபெற்ற படப்பிடிப்பால் நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்கப்படவோ, அவா்கள் சிரமப்படவோ இல்லை என வாதிட்டாா்.

இந்நிலையில் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினா் வி.கே. பீனா குமாரி ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘மாநிலத்தில் உள்ள விபத்து சிகிச்சை பிரிவு போன்ற 24 மணி நேர வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகளில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கக் கூடாது. படப்பிடிப்புக்கு அரசு மருத்துவமனையை படக்குழுவினா் தோ்வு செய்தது பொருத்தமற்றது. அரசு மருத்துவமனைகள் மக்கள் சிகிச்சைக்காகச் செல்லும் இடங்கள். அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்குவது சுகாதார பணியாளா்களின் உறுதிமொழிக்கு எதிரானது’ என குறிப்பிட்டிருந்தது.

மேலும், இது தொடா்பாக மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் கண்காணிப்பாளா்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறு சுகாதாரத் துறை இயக்குநரை கேட்டுக் கொண்டது.

You may also like

© RajTamil Network – 2024