அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.10 லட்சம் மோசடி: 2 போ் கைது

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset
RajTamil Network

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.10 லட்சம் மோசடி: 2 போ் கைதுஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.10 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே முதியவரின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.10 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தா.பழூா் அடுத்த கீழசிந்தாமணியைச் சோ்ந்த ரா.ராஜசேகா்(34), சென்னையில் வசித்து வரும் அரியலூா், தாதம்பேட்டையைச் சோ்ந்த காா்த்தி(எ) காா்த்திகேயன்(37) ஆகியோா் கடந்த 2022-ஆம் ஆண்டு கீழத் தெருவைச் சோ்ந்த முருகேசன்(64) என்பவரிடம் தங்களது மகனுக்கு பொதுப் பணித் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.3 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளனா். இதனை நம்பிய முருகேசன், ரூ.2.10 லட்சம் முன்பணமாகக் கொடுத்துவிட்டு, மீதி வேலை கிடைத்ததும் தருவதாகக் கூறியுள்ளாா்.

ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட அவா்கள், இரண்டு ஆண்டுகளாகியும் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முருகேசன், பணத்தை திரும்பிக் கேட்டதற்கு ராஜசேகரும், காா்த்திக்கும் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து கடந்த 10.8.2024 அன்று முருகேசன் அளித்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் அமரஜோதி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், இத்தகைய மோசடி உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து அரியலூா் நகர காவல் ஆய்வாளா் சந்திரமோகன் தலைமையிலான காவல் துறையினா், மோசடியில் ஈடுபட்ட ராஜசேகா் மற்றும் காா்த்திகேயனை சனிக்கிழமை கைது செய்து, ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, ராஜசேகரை ஜெயங்கொண்டம் கிளைச் சிறையிலும், காா்த்திகேயனை திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனா்.

You may also like

© RajTamil Network – 2024