Wednesday, September 25, 2024

அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி தாக்கப்பட்ட சம்பவம்: 8 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்கு

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி தாக்கப்பட்ட சம்பவம்: 8 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்கு

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த மினி லார் ஓட்டுநர் காளிகுமார் (33) நேற்று முன்தினம் திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்காக இவரது உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று வைக்கப்பட்டிருந்து. அப்போது அங்கு கூடிய காளிகுமாரின் உறவினர்கள், கொலையாளிகளை உடனே கைதுசெய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய அருப்புக்கோட்டை டிஎஸ்பி-யான காயத்ரியை சிலர் தாக்கினர். இச்சம்பவம் அருப்புக்கோட்டையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக எஸ்பி-யான கண்ணன் நேரில் விசாரணை நடத்தினார். டிஎஸ்பி-யான காயத்ரி தாக்கப்பட்டது தொடர்பாக, நெல்லிக்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன், முத்துப்பட்டியைச் சேர்ந்த முருகேசன், பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த பொன்முருகன், ஜெயராமன், சாய்குமார், பாலாஜி, அம்மன்பட்டியைச் சேர்ந்த சூரியா, காளிமுத்து ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

இவர்களில், பாலமுருகன் என்பவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். முத்துப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் தவிர மற்ற 6 பேரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள முருகேசனைப் பிடிக்க திருச்சுழி டிஎஸ்பி-யான ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதோடு, காளிகுமார் கொலை வழக்கில் கொலையாளிகளை உடனை கைது செய்யக் கோரி அருப்புக்கோட்டையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட அவரது உறவினர்களான தற்போது கைது செய்யப்பட்டுள்ள 7 நபர்கள் உள்பட 116 பேர் மீதும் அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024