Saturday, September 21, 2024

அரைஇறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இங்கிலாந்து அணி: அமெரிக்காவுடன் இன்று மோதல்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

பிரிட்ஜ்டவுன்,

வெஸ்ட்இண்டீசில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்8 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டி விட்டது.

இதில் குரூப் 2-ல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவை சந்திக்கிறது.

லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லையுடன் தனது பிரிவில் (பி) 2-வது இடம் பெற்ற ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, சூப்பர் 8 சுற்றில் முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் பணிந்தது. 2 புள்ளிகள் பெற்றுள்ள இங்கிலாந்து அணி (ரன் ரேட் +0.412) தனது பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது. அரைஇறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவதுடன், ரன் ரேட்டிலும் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியமானதாகும். தோற்றால் வெளியேற வேண்டியது வரும்.

இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் பில் சால்ட், ஹாரி புரூக், பேர்ஸ்டோ, கேப்டன் ஜோஸ் பட்லர் ஆகியோர் நல்ல நிலையில் இருக்கின்றனர். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மொயீன் அலி ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். மார்க் வுட், சாம் கர்ரன் பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது தேவையான ஒன்றாகும்.

அமெரிக்க அணி லீக் சுற்றில் நன்றாக செயல்பட்டது. ஆனால் சூப்பர் 8 சுற்றில் அந்த அணி சோபிக்கவில்லை. சூப்பர் 8 சுற்றில் அந்த அணி முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் 18 ரன் வித்தியாசத்திலும், அடுத்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசிடம் தோல்வி கண்டது. புள்ளி கணக்கை தொடங்காமல் இருக்கும் அமெரிக்க அணி (ரன் ரேட் -2.908) தனது பிரிவில் கடைசி இடத்தில் இருப்பதுடன், அரைஇறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது.

அமெரிக்க அணியில் பேட்டிங்கில் ஆன்ட்ரீஸ் கவுஸ், ஆரோன் ஜோன்ஸ், நிதிஷ் குமாரும், பந்து வீச்சில் நெட்ராவால்கர், ஹர்மீத் சிங், நாஸ்துஸ் கென்ஜிச்சும் பலம் சேர்க்கின்றனர்.தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களில் ஆடாத கேப்டன் மோனக் பட்டேல் இன்றைய ஆட்டத்திலும் ஆடமாட்டார் என்று தெரிகிறது. எனவே இந்த ஆட்டத்திலும் ஆரோன் ஜோன்ஸ் தொடர்ந்து கேப்டன் பொறுப்பை கவனிப்பார்.

வலுவான இங்கிலாந்து அணியின் சவாலை, உலகக் கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைத்துள்ள அமெரிக்க அணி சமாளிக்க வேண்டும் என்றால் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது இன்றியமையாததாகும். அரைஇறுதிக்கு முன்னேறுவதில் ரன்-ரேட் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் அதிரடியை எதிர்பார்க்கலாம். இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

வெஸ்ட்இண்டீஸ் – தென்ஆப்பிரிக்கா

இதே பிரிவில் வெஸ்ட்இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஆட்டம் ஆன்டிகுவாவில் உள்ளூர் நேரப்படி இரவில் தொடங்கினாலும், இந்திய நேரப்படி மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தான் தெரியும். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ரன் ரேட்டில் (+ 1.814) வலுவாக இருப்பதால் வெற்றி பெற்றாலே அரைஇறுதிக்கு முன்னேறி விடும்.

தென்ஆப்பிரிக்கா 4 புள்ளிகள் பெற்று இருந்தாலும் (ரன் ரேட் +0.625) அந்த அணியின் நிலைமை சிக்கலில் தான் இருக்கிறது. அந்த அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். ஒருவேளை தென்ஆப்பிரிக்க அணி தோற்றால், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 3 அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும் வாய்ப்பும் உருவாகும். இவ்வாறு அமையும் போது ரன்-ரேட்டில் டாப்-2 இடம் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 11 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

You may also like

© RajTamil Network – 2024