புது தில்லி: உத்தரப்பிரதேசத்தில் இயங்கி வரும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையின கல்வி நிலையம் என்ற அந்தஸ்து பெற்றது என்ற தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.
உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், 4 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்துக்கு வழங்கிய சிறுபான்மை அந்தஸ்து செல்லும் என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த 7 நீதிபதிகளில், 4 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பளித்தனர். அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது. நிறுவனம் சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படுகிறதா என்பதுதான் முக்கியம் என்றும் இவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். மற்ற 3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கு கல்வியை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 30வது பிரிவின் கீழ் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை அந்தஸ்து பெற்றுள்ளதா என்ற சட்டரீதியான கேள்விக்கு நான்கு தனித்தனியான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், பெரும்பாலான நீதிபதிகள் அதாவது 4 : 3 என்ற விகிதத்தில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கியது செல்லும் என்று ஒருமித்த தீர்ப்பை அளித்திருக்கிறார்கள்.
ஒரு கல்வி நிலையம், சிறுபான்மை நிறுவனமாக இருப்பதற்கு அது சிறுபான்மையினரால் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சிறுபான்மை உறுப்பினர்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது அவசியமில்லை என்று நாங்கள் கருதுகிறோம். சிறுபான்மை நிறுவனங்கள் மதச்சார்பற்ற கல்வியை வலியுறுத்த விரும்பலாம், அதற்காக சிறுபான்மை உறுப்பினர்கள் நிர்வாகத்தில் தேவையில்லை என்று தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் நகரில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், 150 ஆண்டுகளுக்கு முன், சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகம், சிறுபான்மையினர் அந்தஸ்துடன் செயல்படுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 45,000 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.