Saturday, September 21, 2024

அவரிடம் இருந்து இந்தியாவை வீழ்த்த நிறைய ஆலோசனைகள் பெற்றோம் – பின்னணியை பகிர்ந்த ஜெயசூர்யா

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

இங்கிலாந்து தொடருடன் இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக உள்ளதாக ஜெயசூர்யா கூறியுள்ளார்.

கொழும்பு,

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இலங்கை வென்றுள்ளது. அதனால் 27 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் தொடரை வென்று இலங்கை அசத்தியுள்ளது.

இந்நிலையில் தொடரில் இந்தியாவை தோற்கடிப்பதற்கு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் துணைப் பயிற்சியாளர் ஜூபின் பாருச்சா உதவியதாக இலங்கையின் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். மேலும் தற்காலிகமாக பொறுப்பேற்ற தாம் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து தொடருடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக உள்ளதாக ஜெயசூர்யா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எனக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஜூபின் பாருச்சா கிடைத்தார். இங்கே வந்து அவர் 7 நாட்கள் பயிற்சி கொடுத்தார். அவரிடம் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். குறிப்பாக எப்படி நீண்ட இன்னிங்ஸ் விளையாடுவது, எப்படி ஒரு பேட்ஸ்மேன் 2 – 3 மணி நேரம் பேட்டிங் செய்வது போன்றவற்றை கற்றுக் கொண்டோம். அது எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தது.

திறமையான எங்கள் வீரர்களுக்கு தன்னம்பிக்கை மட்டுமே தேவைப்பட்டது. நன்றாக பேட்டிங் செய்து, நன்றாக பந்து வீசினால் தன்னம்பிக்கை தாமாக வந்து விடும். நாளின் இறுதியில் நாங்கள் உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்தியுள்ளோம். இலங்கை தற்சமயத்தில் நல்ல பயிற்சியாளரை பார்க்கிறது. நான் இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடருக்காக மட்டுமே வந்தேன். உயர்தர செயல்பாடுகளுக்காக நான் இருப்பேன். இலங்கை கிரிக்கெட்டுக்கு நான் தொடர்ந்து ஆதரவு கொடுப்பேன்.

எங்கள் வீரர்களுக்கு தேவையான உதவியும் பயிற்சியாளர்களுக்கு தேவையான வசதியையும் செய்து கொடுக்கும் இலங்கை வாரியத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் அவர்கள் நல்ல பயிற்சியாளரை கொண்டு வந்து நம் இளம் வீரர்களை முன்னேற்றி இந்த வெற்றி நடையை தொடர்வார்கள் என்று நம்புகிறேன்" என கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024