Friday, September 20, 2024

‘அ.தி.மு.க. கூட்டணியில் நான் மட்டுமே மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தேன்’ – எடப்பாடி பழனிசாமி

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

'அ.தி.மு.க. கூட்டணிக்காக நான் மட்டுமே மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தேன்' என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியாகின. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல் முறையாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி 8 முறை தமிழகத்திற்கு வருகை தந்தார். மேலும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தமிழகத்திற்கு வந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்கள்.

அதே போல் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி பிரசாரம் மேற்கொண்டார்.

இதற்கிடையில் அ.தி.மு.க.வை பொறுத்தவரை நான் ஒருவன்தான் எங்கள் கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன். அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள், அந்தந்த தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனிடையே அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பல்வேறு அவதூறு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இத்தனைக்கும் இடையில் அ.தி.மு.க. இந்த தேர்தலை சந்தித்து 2019 மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட ஒரு சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. இதை அ.தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்ற கட்சிகளுக்காக பிரசாரம் மேற்கொண்டார்கள். ஆனால் அ.தி.மு.க. கூட்டணி எந்த ஆதரவும் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு, கடந்த முறை பெற்ற வாக்குக்ளை விட 2024 மக்களவை தேர்தலில் கூடுதலான வாக்குகளை பெற்றிருக்கிறது."

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024