Wednesday, October 2, 2024

ஆக.17 வரை வேலை நிறுத்தம் கூடாது: என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்கத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

by rajtamil
Published: Updated: 0 comment 14 views
A+A-
Reset

ஆக.17 வரை வேலை நிறுத்தம் கூடாது: என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்கத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆகஸ்ட் 17ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணி நிரந்தரம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்எல்சி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, என்எல்சி தரப்பில், “இந்த விவகாரம் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருதரப்புக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தையும் நிலுவையில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டது. என்எல்சி தொழிற்சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி. சங்கரன், “20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம் இதுவரையிலும் நிறைவேற்றவில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் நிர்வாகம் அந்த உத்தரவை நிறைவேற்ற மறுக்கிறது. சுமார் 13 ஆயிரம் தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் நிலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி வேலை நிறுத்தம் செய்வது என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. இந்த போராட்டத்தில் ஈடுபடும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை” என்றார்.

இதையடுத்து நீதிபதி, “இருதரப்பு வாதங்களும் முடிவடையாததால் வரும் ஆக.17ம் தேதி வரை தொழிற்சங்கத்தினர் எந்த வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது” என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like

© RajTamil Network – 2024