ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நாள், வைணவத் தலங்கள் அனைத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதம் முழுவதும் தமிழக கோவில்கள் திருவிழா போல் களை கட்டி இருக்கும். ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என்ற வரிசையில் ஆடி அமாவாசையை அடுத்து வரும் மிகப்பெரிய அம்மன் விழா ஆடிப்பூரம் ஆகும்.
மகாலட்சுமியின் அம்சமான ஆண்டாள் ஆடிப்பூரத்தில் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டாள் நாச்சியார், மனிதர்களைப் போல பிறப்பெடுத்தவர் இல்லை. அவர் பெருமாளுக்கு சேவைசெய்து கொண்டிருந்த பெரியாழ்வார் வளர்த்த நந்தவனத்தில் துளசிச் செடியின் கீழ் தோன்றியவர். அந்த தாயாரை, அன்போடும், பண்போடும் வளர்த்து வந்த பெரியாழ்வார், தினமும் அதிகாலையில் பூக்களைப் பறித்து அதனை மாலைகளாகத் தொடுத்து பெருமாளுக்கு அளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
அப்படி பெருமாளுக்கு கொடுத்தனுப்பும் மாலைகளை, அதற்கு முன்பாகவே அணிந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார், ஆண்டாள். பல நாட்களாக நடைபெற்று வந்த இந்த செயலை, ஒரு நாள் பெரியாழ்வார் பார்த்துவிட்டார். இறைவனுக்கு சாற்றும் மாலையை இப்படி அசுத்தம் செய்து விட்டாயே என்று, ஆண்டாளை கடிந்துகொண்டார். பின்னர் இறைவனிடம் மனமுருக மன்னிப்பும் கேட்டார். அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், "எனக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையையே தர வேண்டும்" என்றார்.
அப்போதுதான், ஆண்டாள் சாதாரண பிள்ளை இல்லை. அவர் தெய்வக்குழந்தை என்பது பெரியாழ்வாருக்கு தெரியவந்தது.
ஆண்டாள் திருமண வயதை அடைந்ததும், அவரை பெருமாளின் கட்டளைப்படி திருவரங்கம் அழைத்துச் சென்றார், பெரியாழ்வார். அங்கு அரங்கநாதரிடம் ஒளியாக கலந்து விட்டார் ஆண்டாள் நாச்சியார்.
சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள் என போற்றப்படும் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நாள், வைணவத் தலங்கள் அனைத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி (புதன்கிழமை) ஆடிப்பூர விழா நடைபெறுகிறது. ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் அன்றைய தினம் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
திருமணமாகாத பெண்கள், ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional